பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்

வரைமுறை என்பதும் எனக்குத் தெளிவானது. கலைஞரின் வேகத்தையும், தனது நிதானத்தையும், சில நிகழ்ச்சிகள் மூலம் குறிப்பிட்டார். கலைஞரின் செயல்பாட்டுத் திறனையும், தனது தீர்க்க தரிசனமான சிந்தனைப் போக்கையும் ஒப்பிட்ட பேராசிரியர், இருவருக்குமிடையே நிலவும் அணுகுமுறை “வேற்றுமைகளில்” ஒரு ஒற்றுமை நிலவுவதை சொல்லாமலே உணர்த்திவிட்டார். ஒரு நாணயத்தின் அசோக சக்கரம் கலைஞர் என்றால், அந்த நாணயத்தின் மறுபக்கத்தின் குறியீடு பேராசிரியர்.

ராம, லட்சுமணர்களிடம் ஒற்றுமை இருந்தாலும், அது ஆண்டான் அடிமை உறவு. புதிய இராம லட்சுமணர்களான கலைஞருக்கும் பேராசிரியருக்கும் உள்ள உறவு ஒரு தோழமை உறவு. பேராசிரியரும், கலைஞரும் பொது நிகழ்ச்சிகளிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் ஒருவருக்கொருவர் பழகும் விதத்தை நான் பத்திரிகையாளன் என்ற முறையில் ரசிப்பதுண்டு. பேராசிரியரின் மெளன சம்மதத்தை அவரது முகபாவம் மூலம் வாங்கிக் கொண்டே சில திடீர்ப் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பவர் கலைஞர். எனக்குத் தெரிந்த அரசியலில் இப்படிப்பட்ட இணையான தோழமையை நான் கண்டதில்லை. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், இந்த இணைக்கு முன்னோடிகளாக கார்ல் மார்க்சும், ஏஞ்செல்சும்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

இன்றைய தமிழர்கள் சாதிச் சண்டைகளில் உடல் சிதைந்து, அந்நியக் கலாச்சாரப் படையெடுப்பால் மனம் சிதைந்து கிடக்கிறார்கள். கலைஞர், பேராசிரியர் காலத்துக்குப் பிறகு, இவர்கள் என்ன ஆவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த “அறியாத் தமிழர்களின் அந்நிய மோகம்” இவர்களை என்ன பாடுபடுத்தப் போகிறதோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.

எனவே, பேராசிரியர் அவர்கள் மேன்மேலும் விழா காண வேண்டுமென்பதும், அந்த விழாவில் கலைஞரும் கலந்துகொள்ள வேண்டுமென்பதும் எனது நெஞ்சார்ந்த விருப்பம். எல்லைக் காந்திகான் அப்துல் கபார்கான் நாட்டுப் பிரிவினையின்போது சொன்னதைச் சிறிது மாற்றிச் சொல்ல வேண்டும்போல் தோன்றுகிறது.

“ஏய், இயற்கையே! தயவு செய்து மூப்பைச் சாக்காகக் கட்டி எங்கள் தலைவர்களை எங்களிடமிருந்து பிரித்தெடுத்து எங்களை ஒநாய்களிடம் ஒப்படைத்து விடாதே... அவர்களை பல்லாண்டு, பல்லாண்டு வாழ வைப்பாயாக.”

பேராசிரியர் பவளவிழா மலர் - 1998.