பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 படைப்பாளியும் தாய்மொழியும்

புறக்கணிப்பு ஆணை ஒரு தீர்வல்ல. தமிழாசிரியர்கள்தான் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறார்கள் என்பதும் சரியல்ல. இவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு எம்.பில், முனைவர் பட்டங்களுக்குத்தானே தவிர, எழுத்தாளர்களுக்கான சலுகைகள் அல்ல. எனக்குத் தெரிந்த வரை, என் படைப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட ஐம்பதுக்கும் அதிகமான ஆய்வுகளில், ஒரு சிலவற்றைத் தவிர, எஞ்சியவை உருக்குலைந்தவை. ஒரு சில தமிழாசிரியர்களைத்தவிர பெரும்பாலோருக்கு நவீன இலக்கியம் துளிகூடத் தெரியாது முனைவர் தமிழண்ணல் அவர்கள் நினைப்பதுபோல் தமிழ்ப் புலமையால் மட்டுமே தமிழ் படைப்பை உருவாக்க முடியாது. தமிழில் பிறமொழி கலவை செய்து கொச்சைப்படுத்துகிற எழுத்தாளர்கள், தமிழ்க்குடிமகன் அவர்கள் நினைப்பதுபோல் தமிழாசிரி யர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கவில்லை. சாகித்திய அகாடமி, தேசிய புத்தக அறக்கட்டளை போன்ற அரசு நிறுவனங்களிலும் பிறமொழி இலக்கிய அமைப்புக்களிலும் இவர்கள் தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

எனவே, தமிழ்ப்பேராசிரியர்கள், அந்தத் தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, படைப்பிலக்கியத்துக்கு வரலாம் என்று நினைப்பது, பகல் கனவு. அதேசமயம் படைப்பாற்றலை சமூகச் சிந்தனையால் வலுப்படுத்தி - அவர்கள் படைப்பிலக்கியத்திற்கு வருவது இலக்கிய வளத்திற்கும், மொழிவளர்ச்சிக்கும் உதவும். தமிழறிஞர் மு.வ. அவர்கள் இதற்கு வழிகாட்டி. என்றாலும் அவரையும் பலமடங்கு தாண்டியாகவேண்டும்.

இந்தப் பின்னணியில், தன் மகனை, சான்றோன் எனக்கேட்ட தாயைப் போல், தமிழாசிரியர்கள், தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் மண்ணில் காலூன்றியபடியே எழுதும் படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும். தமிழாசிரியர்களுக்கும் இத்தகைய, படைப்பாளிகளுக்கும், இடையே அடிக்கடி கலந்துரையாடல் இருக்க வேண்டும். இதுதான், தாய் மொழியைப் பற்றியும் அதுதந்த முன்னோர்களைப் பற்றியும் கவலைப்படாத எழுத்தாளர்களுக்கு நல்ல பதிலடியாக அல்லது நல்ல பாடமாக அமையும்.

தினமணி தலையங்கப் பக்கக் கட்டுரை - 1999.