பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


அங்ஙனம் ஒன்றாய் ஒளிரும் பொருளை அறியும் வழியோ, நமது உள்ளத்தியல்பைப் பொறுத்தது. உள்ளமோ பொருள்களை அறிகிறது; தொழிலின்மேல் ஊக்காமாய் முயல்கின்றது; இன்புற்றும் சினந்தும் உள்ளக் கிளர்ச்சியால் பொங்குகிறது. உள்ளத்தின் செயலனைத்தையும் இம்மூன்று தலைப்பில் அடக்கி விடலாம். உள்ளத்தின் அறிவோ, கல்வியால் நீண்டு வளர்கிறது. தொழிலுறு நிலையோ ஒழுக்கத்தால் உயர்ந்து ஓங்கி எழுகிறது. உள்ளக் கிளர்ச்சியும் அழகின் வயப்பட்டு அன்பாய் அகன்று இன்புறுகின்றது. நல்லறிவும், நல்லொழுக்கமும், நல்லழகும் நமது உள்ளத்தின் நாட்டமாகும். (சத்யம்-சிவம்-ஞானம்-சுந்தரம்) நாட நின்ற பொருளோ உண்மையறிவின்பமே அன்றி, வேறில்லை. ஆகவே, கல்விக் கடலையும், ‘குணப்பெருங் குன்றை’யும், அழகு வெள்ளத்தையும் காணும் போதெல்லாம் அவற்றை இறைவனொளியின் மின்ன்ற் பிழம்பெனக் கண்டு வழிபடுதல் வேண்டும். இவற்றின் வழியே, உண்மை அறிவின்ப‍ப் பெரும்பொருளை உணர்ந்து அதனோடும் ஒன்றாகின்றோம். தமிழர்க்கு, அறிவு, ஒழுக்கம், அழகு என்பன அனைத்தும் அழகாகவே தோன்றின. அழகாவது யாது? உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டுவதாய், இயற்கையினிடத்தே காணக்கிடக்கும் ஓர் இயைபே அன்றோ? இறைவன் வடிவாம் இயற்கையின் உண்மை இயைபினைக் காண்பதே நல்லறிவு. இயற்கையோடு இயைய ஒழுகல் எனும் இறைபணி நிற்-