பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


கதை பாடவரவில்லை. ஆகையால், கழுவேற்றியதைப் பல படியாகப் புனைந்துரையார். தம் தலைவராகிய சம்பந்தரையும் தம் இறைவனாகிய கடவுளையும் இழித்துரைக்கும் வகையில் அவர் கதையை எழுதார். சமணர்மீதே அவர் பழியைச் சுமத்துகின்றார். புனல் வழக்கிடச் சம்பந்தரைச் சமணர் அழைத்தபோது குலச்சிறையார் "இவ்வழக்காட்டத்திற்குப் பணையம் யாதோ?" எனக் கேட்கின்றார். வெகுளியும் பொறாமையும் கொண்ட சமணர், தாம் வெல்வதே துணிவென மருண்டு, சம்பந்தரே தோற்பர் என முடிவு கட்டுகின்றனர். பொறாமையாலும், வெகுளியாலும் தீமூட்டிய அமணர் அவரைக் கொல்லவே எண்ணுகின்றனர். தமக்குத் தாமே கேடு சூழ்தலை மறந்து தோற்றால் கழு ஏறுவோம் என்கின்றார்கள். சம்பந்தர் தோற்றாலும் கழு வேற வேண்டுமன்றோ?

அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்ற
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கழு ஏற்று வான்இவ் வேந்தனே என்று சொன்னார்.

என வருதல் காண்க. ‘பொறாமை காரணமே யாக’ என்பது நோக்குக; உய்த்துணர்க. "மாற்றானுக்கு ஒரு கண் யாதேனும் ஒரு வகையால் போகுமென்பதற்குச் சிறிது இடமிருப்பினும், எனது இரு கண்ணையும் இழக்க முன் வருகிறேன்," என்று கேட்டை விலைக்கு வாங்கிய பொறாமையாளனின் கதையே ஈதாம். கழு