பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


இம்முடிவிற்கேற்ப முறை செய்யவேண்டாவா? மற்றைப் புராணங்களில் சம்பந்தர் அவர்களைச் சைவராமாறு வேண்டிக் கொண்டார் என்பதும், சைவராயினார் கழுவேற வேண்டா என எடுத்துரைத்தார் என்பதும் காணப்படுகின்றன. அவ்வாறு சேக்கிழார் ஒன்றும் கூறவில்லை. குற்றம் செய்தது புலனானால், திருநீறு பூசிப் பிழைக்க முடியுமோ? அரசன் வெருவந்த செய்யாத வரையில் அவன் செங்கோலனாவன். செங்கோல் நெறி கடவாதபோது, சம்பந்தர் எவ்வாறு இடையிட்டுச் செங்கோல் நெறியைத் திரிக்க முடியும்?

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

என்றும்,

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

என்றும் வள்ளுவர் கூறுதல் காண்க. கூறிய குறளுக்குப் பரிமேலழகர் "கொடியவர் என்றது தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவார் என்ற இவர் முதலாயினோரை. இவரை வடநூலார் ஆததாயிகள் என்ப. இப்பெற்றியோரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின் கோறலும் அரசர்க்குச்