பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


அதன் பயனாகவே சேக்கிழார் பெருமானும் கதையைத் திருத்தியமைக்கின்றார். எனவே, கழுவேற்றிய கதை திருக்கடைக்காப்புச் செய்யுள்களின் போக்கிற்கு முரண்படுகின்றது எனக் கண்டறிந்தார் சேக்கிழார் என்பது புலனாகின்றது. திரு அருண்மொழித் தேவரினும் தேவார ஆராய்ச்சியிற் சிறந்தார் உயிர் வாழ்ந்தது இல்லை என்பது ஒருதலை. அப்பெரியாருக்கே அவ்வாறு ஐயம் எழுந்திருக்குமாயின் கழுவேறிய கதை தேவாரத்தில் கூறப்படவில்லை என்ற நமது முடிவு வலிவடைகின்றதன்றோ!

சேக்கிழாரைப் போன்ற பேராராய்ச்சியாளர் நம்பியாண்டார் நம்பி அல்லர். அவர் திருவருட் பெரியார்; சிறந்த பாவலர். ஆதலின், அவர் கூறியமை பற்றிக் கழுவேறிய கதையை உண்மை எனக் கொள்ள இயலாது. அவர் காலத்தில் அக்கதை வழங்கியமையால் அவர் பாடினார். ஆதலின் அவர் மேலும் குறை இல்லை.

கழுவேற்றிய கதைக்குத் தேவாரத்தே அகச்சான்றுகள் இல்லை; புறச்சான்றுகளும் இல்லை; நம்பியாண்டார் நாளில்தான் அக்கதை வழங்கத்தொடங்கியது; தேவார ஆராய்ச்சியிற் சிறந்த சேக்கிழாரைப் போன்றோர் அக்கதை தேவாரத்தோடு முரண்படுகின்றமை கண்டு ஐயுற்றார்கள். அதனால், அக்கதையை