பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


ஏற்றபடி திருவருட் பெரும்புலவர் என்ற வகையில் மாற்றியமைக்கப் புகுந்தனர் என்பதாயிற்று. இவ்வளவும் கூறிய பின் இக்கதை நடக்கவில்லை எனச் சொல்லவும் வேண்டுமோ?

கழுவேற்றிய திருவிழா நடப்பதனாலும், கழு ஏற்றிய இடத்தை இன்றும் மக்கள் நமக்குக் காட்டுவதனாலும் இக்கதை உண்மையே என்று வழக்காடுவாரும் உள்ளனர். திருவதிகையில் மூவெயில் முருக்கிய திருவிழா ஒவ்வோராண்டும் நடைபெறுகின்றது. தூங்கெயில் எரிந்த இடை வெளியையும் மக்கள் நமக்குக் காட்டுகின்றனர். அப்போரில் சிவனது தேர் அச்சு முறிந்த இடமே அச்சிறுபாக்கமாகும். படைகள் அணிவகுத்து நின்ற இடமே பேரணியாம். ஆனால் திருமூலரோ,

அப்பணி செஞ்சடை ஆதிபுராதன‍ன்
முப்புரம் எரிசெய்தன‍ன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எரிசெய்தமை யாரறி வாரே.

என்று இக்கதையைப் பொய்யென்று கூறி அக்கதையின் கருத்தை விளக்கிக் கூறுகின்றார். ஆதலின், திருவிழா நடப்பதனாலும், இடத்தை மக்கள் காட்டுவதாலும், ஒரு கதையை உண்மை என்று துணிந்து உறுதி கூற முடியாது.

மேனாட்டிற்கும் கீழ் நாட்டிற்கும் உள்ள வேற்றுமை ஒன்றுண்டு. கொள்கைகளைப் பற்றி