பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

________________

அடங்கிக்கிடவாது, அப்போதப்போது புதியன புதியனவாகத் தோன்றும் அசத்தேயாம். ஆதலின், “சத் அசத்காரியவாதிகள்” என்று சமணர்கள் பெயர் பெறுவார்கள்

எனவே, “ஒரு பொருள் உண்டா இல்லையா” என்றபோது, தனிநிலைக்கொள்கையாக "உண்டு என்றோ இல்லை" என்றோ ஒரு முடிபாகக் கூறுவதற்கில்லை. உடன்பாட்டு நிலையால் “உண்டு போலும்” எனலாம். (குடம் உண்டு போலும்) எதிர்மறை நிலையால் "இல்லை" என்றும் கூறலாம். (குடம் இல்லை போலும்). இரு நிலையையும், ஒரு பொருள் ஓர் இடம் ஒரு வடிவம் ஒரு காலம், என்ற வெவ்வேறு நோக்கத்திற் கொண்டு "உண்டு; இல்லை" என நிரல்நிறை நிலையாகக் கூறலாம்.(குடம் உண்டும் குடம் இல்லையும் ஆம் போலும்) இவ்வாறு அன்றி உண்மையையும் இன்மையையும் ஒரே காலத்தில் உள்ள ஒருங்கு நிலையாகக் கூறும்போது, அதனை உணர்வது அருமை. ஆதலின், அதனைக் கூறமுடியா நிலைமை என்றே கூறவேண்டும். (குடம் கூறமுடியாத நிலையினது போலும்) இந்த நான்கு நிலைகள் அடிப்படைகளாம். நான்காவதாகக் கூறிய ஒருங்கு நிலையாம் கூறமுடியாமையோடு முதல் கூறிய உடன்பாட்டு நிலையையும் சேர்த்துக் கூறுவது ஐந்தாவதாம். (குடம் உள்ளதும் கூறமுடியாததும் ஆம் போலும்). ஒருங்கு நிலையோடு இரண்டாவது கூறிய எதிர்மறைநிலையையும் சேர்த்துத் கூறுவது ஆறாவதாம். (குடம் இல்லதும் கூற முடியாததும் ஆம் போலும்)