பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

________________

"பீலி கொண்டுழல்வார்" சமணர் என்பது பொதுக் கொள்கையானாலும் வேறு சிலரும் மயில் தோகையைக் கையில் கொண்டு சென்றனர் என்று கருத இடமுண்டு. பிண்டி என்பது அசோகமரம்; இதனைக் காப்பாரோ இதனை வணங்க அதன்பால் நிற்பாரோ சமணரே ஆம். ஆனால், பிண்டிபாலம் என்ற எறிபடை ஏந்தியவர் என்றும் பொருள் ஆகலாம். சில துறவிகள் படைஎடுத்து அரசியற் சூழ்ச்சியில் தலைகுறிப்பதாகவும் இதனைக் கொள்ளலாம். மண்டைகொள் தேரர் என்பது மண்டையாம் திருவோட்டில் உணவுண்ணும் தேரராம் புத்தர்களையே குறிப்பதாம். கண்ட நூலார் என்பது புதிது புத்தாகக் கற்பனை செய்து கட்டிவிட்ட நூலுடையார்: குற்றங்குறையுடைய மூளி நூலினைப் பின்பற்றுவோர் என்று பொருளாயின் வேதத்தினும் புறம்பாகப் பலபல நூல்களை எடுத்துக் காட்டுவோரைக் குறிப்பதாம். கடுந்தொழிலாளர்என்பது கொடுந்தொழில் செய்து அலைக்கழிப்பாரையும், கடுந்துறவு மேற்கொள்வாரையும், கரும காண்டிகளையும், வயிற்றுப் பிழைப்புக்காகத் தொழில் புரியும் துறவிகளையும் குறிப்பதாகலாம். நூலை நம்புவோர், தொழிலை நம்புவோர் என அருளை நம்பாதாரைச் சம்பந்தர் வகை செய்கின்றார் போலும். இன்னார் எனச் சுட்டாமல் இவர்கள் எல்லோரையும் பொதுவாகத் திரட்டிக் குற்றம் காட்டுவது சம்பந்தர் இயல்பு என்பதும் ஒன்று.