பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


கின்றார் சம்பந்தப் பெருந்தகையார்? ஒன்றுக்கு இரண்டாக, “காட்டுமாவதுரித்துரி போர்த்துடல்” என்ற திருக்கடைக் காப்பும், “வேத வேள்வியை நிந்தனை செய்துழல்” என்ற திருக்கடைக்காப்பும் பாடி, ஒருமுறைக்கு இருபது முறை “வாது செயத் திருவுள்ளமே” என்று வேண்டி, ஆண்டவனை விடை கேட்கின்றாரன்றோ? எனவே, அவனருளின்றிச் சமணரோடு மன்றாடுவதும் ஒண்ணாது என்பதாயிற்று. அக்காலத்தில் அறம் பிறழ்ந்தமையால் மன்றாட வேண்டியதாயிற்று. ஆண்டவனருளும் ஆளுடைய பிள்ளையாருக்குக் கை கூடுவதாயிற்று.

இவ்வளவும் கூறியமையால், சம்பந்தர் சமணர்களுடைய கொள்கைகளை ஆக்கப் பிறந்தவரே அன்றி அழிக்கப் பிறந்தவரல்லர் என்பது தெளிவாகின்றது.


3. பேய்த்துறவு


I

சம்பந்தர் தனது திருக்கடைக்காப்புகளில் பத்தாவது பாடல்தோறும் புத்தர்களையும் சமணர்களையும் பழித்துரையாடவில்லையா? சமணர்களையும் புத்தர்களையும் அழிக்கவேயன்றோ, அப்பெரியார் தோன்றினார்? சம்பந்தருடைய தகப்பனார் சமணரை அழிக்க ஒரு பிள்ளை வேண்டும் என நோன்பு நோற்றார் எனச் சேக்கிழார் பாடுகின்றார் அன்றோ?