பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


தமிழ் வான்பயிரை தழைத்தோங்கச் செய்தார். அதற்கே பிறந்தார். அதனையே செய்து முடித்தார். இதனைத்தான் சேக்கிழாரும் குறிக்கின்றார். சில கருத்துக்கள் நமக்கு உண்மை அல்லவென்று தோன்றினால், நாம் அவற்றை மறுத்துரையாட வேண்டுவது நமது கடமையாகும். ஈதே இயற்கை வழியே இறைபணி நிற்றலாகும். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒளியாமல் உண்மையை எடுத்தோதியதால் அன்றோ உலகமும் உண்மை வழியே உலவுகின்றது?

“தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்”

என்ற குறளுக்கு இவ்வாறும் பொருள் கொள்ள இடமுண்டன்றோ? சம்பந்தர், இவ்வாறு சிலர் கொள்கைகளைக் குறிப்பாலும் வெளிப்படையாலும் மறுத்துரையாடுகின்றார். அதற்கு மேலும் ஒருபடி சென்று சில செயல்களை எள்ளி நகையாடிப் பழித்துரைக்கின்றார். இவ்வாறு பழிப்பதும் அறமேயா என்பதே கேள்வி.

சம்பந்தர் காலத்தில் தலைவிரித்தாடியவர்கள் சமணர்களில் சிலரேயாவர். அந்நாளில் புத்தர்கள் அத்துணைச் சீரும் செல்வாக்கும் பெற்று விளங்கவில்லை. எனவே, இப்பெரியார் சமணரோடுதான் பெரிதும் மன்றாட வேண்டியிருந்தது. ஆனால், சம்பந்தரே சமணர்கள் அனைவரையும் பழிக்கவில்லை. அவர்களில் துறவறம் பூண்ட ஒரு சாராரையே பழி தூற்றுகின்றார். அத்துறவினருள்ளும் வெள்ளை உடுத்த சுவேதாம்பர‍ர், உடை-