பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

 

முன்னுரை

சமுதாயம் இயங்கி வருவதனைச் ‘சமுதாய இயக்க இயல்’ என மனநூல் முறைப்படியும், அரசியல்முறைப்படியும் ஆராய்வது இருபதாம் நூற்றாண்டின் சிறப்பு இயல்பு. சமுதாயத்தில் போராட்டம் எழுவது எப்படி? அப்போராட்டம் சமயம், மொழி, நம்பிக்கை, இனம், சாதி, பண்பாடு முதலிய பல காரணங்களைக் கொண்டு எழும். உலகம் ஒரு குடும்பம் ஆதல் வேண்டுமானால், இத்தகைய போராட்டங்கள் எழாதபடி செய்தல் வேண்டும். இவை எழுவதற்கான வாய்ப்புக்களையும் எழுந்த முறைகளையும் ஆராய்ந்து அறிந்தாலன்றி அவற்றைத் தடுக்கும் வழியை எவ்வாறு உணர்தல் கூடும்? இந்நாளைய சமுதாயத்தினையும், முன் நாளைய சமுதாயத்தினையும் இந்தக் கண் கொண்டு அறிஞர் ஆராய்கின்றனர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது சங்கப்புலவர் கண்ட உண்மை. “யாதானும் நாடாமால் ஊராமால்” என்கிறார் வள்ளுவர். “அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்,” என்று பாடுகின்றார் சுந்தர‍ர். உலகத்தினையும அனைத்தினையும் ஒரு குடும்பமாக‍க் கண்ட தமிழ்ச் சமுதாயத்திலும் சமுதாயப் போராட்டம் எழாமல் இல்லை.