பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


அதனை உண்டு மேற் செல்வதே எல்லாந் துறந்த பெரியோரின் இயல்பு என்றனர் சமணர்.

"வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று,
வெற்ற மூங்கைகள் போலுண்ணும் மூடர்"

என அப்பர் பாடுதல் காண்க. புத்தர்களோ மக்கள் ஓரிடத்தே அமர்ந்திருந்து உண்பதே இயல்பென வற்புறுத்தினர். உடலினின்றும் உயிர் வலிதே பிரிந்து போகாதபடி, வேண்டிய உணவை உண்ண வேண்டும் என இயற்கை அன்னை ஒரு கட்டுத் திட்டம் ஏற்படுத்தியிருக்கின்றாள். பசி எடுத்தபோது உண்ணுவதே முறையாம்.

"அற்றால் அளவறிந்துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு."

ஆதலின், அவ்வொரு முறையைப் பின் பற்றாது மற்றைய செயற்கைக் கட்டுத் திட்டங்களை அமைத்துக்கொண்டு அவற்றிற்கோர் ஏற்றம் தருவதால் பயன் என்னை? உணவிற்கு அடிமையாவதும் பழியே; செயற்கைக் கட்டுதிட்டங் களுக்கு அடிமையாவதும் பழியே.


VI

ஆதலின் புறவொழுக்கத்தைப் புகழும் இன்னோரை எள்ளி நகையாடுகின்றார் சம்பந்தர். சமணரும் புத்தரும் முரண்பட்டுக் கிடப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். இவை அனைத்தும் அறவொழுக்கத்தின் அடிப்படை அல்ல எனத் தெள்ளிதின் விளக்குகின்றார்.