பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


துணை என வேற்றுமை யறியாது இடர்ப்படுவதால் அன்றோ உலகில் வந்த பெரியோர்கள் காட்டிய வழியில் உலகம் செல்லாது இடர்ப்படுகின்றது? கண்ணனும், புத்தரும், மகா வீரரும், சம்பந்தரும், சங்கரரும், மெய்கண்டாரும், இராமானுசரும், கிறித்துவும், மகம்மதுவும், இராம- கிருட்டினரும், இராமலிங்கரும் முதலான கடவுட்பேரறிவாளர், அவ்வக்காலத்து வழக்கங்களை எடுத்துக் காட்டாகவும் உவமையாகவும் எடுத்துக் கூறி, உண்மையை விளக்கினார்கள். அவ்வுண்மையை மறந்து எடுத்துக்காட்டையே மெய்ப் பொருள் எனக்கொண்டு வழக்காடத் தொடங்கினர் பின் வந்தோர். ஏசுகிறித்துப்பெருமான், உலகில் இருவாள்கள் நிலவுகின்றன என்றும், இரண்டு அரசியல்கள் உள்ளன என்றும் நயம்படப் பேசினார். ஒன்று உலகத்தரசியல்; மற்றொன்று கடவுள் அரசியல் என்பது அவர் கருத்து. இவ்வுண்மையை மறந்து உவமையையே உண்மை எனக் கொண்டு கிறித்தவத் தலைவர்கள் வாளேந்திப்போர் புரிந்து கடவுள் அரசியலை நிலைநாட்ட முயன்ற கதை உலகறிந்தது ஒன்றேயாம். இவ்வாறே சிலர் மயிர், பீலி, குடம், உறி, குடை, தடுக்கு முதலியனவற்றையே வீட்டு வழி என மயங்கி எண்ணி, அவற்றை என்றும் பிரியாது சுமந்து வாழ்ந்தனர். தமிழர் இந்நாளில் இத்துணை நீளமுள்ள கொம்பு கொண்டுதான் பல் விளக்க வேண்டும்; இத்துணை முறை வாய் கொப்பளிக்க வேண்டும்; இத்துணை முறை