பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


ஆகிய மரூஉ மொழியில் இரைந்து பேசுகின்றனர் இவர்கள். எதிருரைத்து நிற்கும் மக்கள் இவர்கள் வடிவைக் கண்டு வெட்குமாறு சினங்கொண்ட பெரிய யானை போலத் திரிந்து, உண்பதை விருப்போடும் உண்டு, அழுக்கேறிய இவர்களுக்கு நான் பின் வாங்குபவன் அல்லன். திருவாலவாயான் எனக்குத் துணையாக நிற்கின்றான்" என்று அவர்களுடைய மறைமொழி யும் (ஆகமம்) நிறை மொழியுமான (மந்திரம்) வடமொழிச் சிதைவாம் மரூஉ மொழிகளை எள்ளி நகையாடுகின்றார்.

பந்தணம் மவை ஒன்றிலம் பரிவொன்றிலம்
மென வாசகம்,

மந்தணம் பலபேசி மாசறு சீர்மை
யின்றிய நாயமே,

அந்தணம் மருகந்தணம் மதுபுத்தணம் மது
சிந்தணச்,

சிந்தணர்க் கெளியேனலேன் திருவாலவா யரன்
நிற்கவே.

"கைப் பொருளாய்க் காக்க அரை ஞாணும் (பந்தணம்) இல்லோம்; ஒரு பற்றும் (பந்தணம்) இல்லோம் என்று தாம் கூறுவர். மறைவாக ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வர். அவர்களது ஒழுக்க முறையினைக் கண்டு சிறந்ததென மருளலாம். ஆனால், அது குற்றமில்லாத சிறப்பன்று. அவ்வொழுக்க முறையே நின்று நீத்தாரையும் (அந்தணம்-அந்த ஞமோ; அந்தணர் என்போர் - அறவோர்; சாதுக்கள்); அருகரையும்