பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


நூலும் ஓதுகின்றனர். அவற்றின் உண்மையை உணரகில்லார். தனித் தமிழ்ச் சுவையும், வடமொழி நயத்தையும் இவர்கள் அறிந்ததுமில்லை; உணர்ந்ததும் இல்லை. குரங்கு கைப்பட்ட கோவை பிய்த்துண்டு போவது போல, இவர்கள் கைப்பட்ட வடமொழியும், தமிழ் மொழியும் சிதைவு உண்ணுகின்றன. இத்தகையாருக்கு யான் எளியனோ? திருவாலவாய் அரனது திருவருள் பெற்றுடையன் அல்லனோ யான்?" என்று இவ்வாறு பாடுகின்றார் சம்பந்தர். ஈண்டு தனித் தமிழ்ச் சுவையை வற்புறுத்துதல் காண்க.

கனக நந்தியும் புட்ப நந்தியும் பவண நந்தியுங் குமணமா,
சுனக நந்தியும் குனக நந்தியும் திவணநந்தியும் மொழிகொளா
அனக நந்தியர் மதுவொழிந்(து)அவமே தவம் புரிவோமெனும்
சினகருக் கெளியேனலேன் திருவாலவா யரனிற்கவே.

என்ற பாடலிலும் அவர்களுடைய பெயரை எள்ளி நகையாடல் காண்க.

இங்குக் கூறியவற்றை ஏழு ஒழுக்கங்கள் எனக்கூறுவர். லோச்சு, (தலைபறித்தல்) திகம்பரம் (உடை நீத்தல்), நீராடாமை, தரையிற் படுத்தல், பல் தேயாமை, நின்று உண்ணல், ஒருபோதுண்ணல் என்பவையே அவை. வடமொழிச் சுவையும் தென்மொழிச் சுவையும் இன்றி மூக்காற் பேசும் மொழி போல இவர்கள் மறைமொழியும் நிறை மொழியும் விளங்கியதனைச் சம்பந்தரைப் பின்பற்றிச் சுந்தரரும் பாடுதல் காண்க.