பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


என்றும் புறவொழுக்கத்தை இப்பெரியார்களே கடிந்துரைக்க வில்லையா? மாமாங்கம் ஆடாது கருப்பொடியாடினால் அறம் வளருமோ? தோலும் துணியும் செருப்புங் குடையும் நீத்து, உறியும் பீலியும், தடுக்கும் தட்டும் கைக்கொண்டால் கற்றோர் என விளங்குவோமோ ? மணற்குவித்தலும் கல்லிடுதலும் பழியானால் போதி நீழலிலும் பிண்டி நீழலிலும் அமர்ந்திருந்து, அந்த ஆல மரத்தினையும் அந்த அசோக மரத்தினையும் சுற்றிச் சுற்றிப் போற்றினால் அம்மரத்தடியில் புத்தர் பெருமானும், மகா வீரரும் உயர் நிலை அடைந்தது போல, நாம் உயர் நிலை பெறுவோமா? எல்லாவற்றையும் இல்லை இல்லை எனப்புறத்தே ஒதுக்கியவர்கள், மரத்தையா கட்டியழ வேண்டும்.—“போதியாரும் பிண்டியாரும்” என்று இக்குறிப்புப் படவே சம்பந்தர் பல முறையும் இவர்களை இழித்துரைக்கின்றார்.


4. போலித்துறவு

I

உலகம் பழிக்கும் செயல்களை ஒழித்தலே வேண்டற்பாலது. அதை ஒழித்து, மயிரை நீட்டியும் மழித்தும் ஒழுகின் பயன் ஒன்றும் இல்லை.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்துவிடின்.

என்பதன்றோ திருக்குறள்? இதனையே சம்பந்தரும்,