பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

25



கலாச்சாரம் உன் முன்னோர்கள் வாழ்ந்த, இன்னும் உன் இனத்தார் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிந்துச் சமவெளியும் கங்கைத் திடலும் என்னாகும் என்பதை யோசித்துப் பார். வேற்றான் கொடி பறக்க, விருதுகள் முழங்க, நீயும் உன் சந்ததியும் அவ்வேற்றரசில் அடிமைகளாக இருக்க எண்ணுகிறாயா ? நீயே மன்னனாகலாமா என்று யோசிக்கிறாய் அதைவிட மோசமான எண்ணம் வேரொன்றுமில்லை, ரண களத்தில் உன் குறுதி சிந்தவா உன் இனத்தார் படைக்கலம் ஏந்தி யுத்த பூமியில் நிற்கும் கோரக் காட்சியை நீ கண்டு கலங்கவா, வேண்டாம். சாணக்கியன் என்ற உன்னைப் போன்றதொரு சதுர்வித உபாயங்களை யறிந்தவன்தான் அகப்படுவது கஷ்டம். சண்டைக்கா ஆட்கள் அகப்படமாட்டார்கள். அதோடு நீயே நேரில் போர்க்கோளம் பூண்டு புறப்படுவதன் மூலம் ஆர்யா வர்த்தம் முழுவதிலுமே இன்று உன் இனத்தாராண்டுக் கொண்டிருக்கும் மகதம், கோச்லம், கெளசாம்பி, தட்ச சீலம் முதலான நகரங்கள் நாசமாய் தர்ப்பையும் முளைக்க முடியாத காடாய்விடும் என்பதையும் மறந்துவிடாதே. உன் ஆத்திரத்தின் தோழனும், இனத்தின் எதிரியுமான உன் புன்சிரிப்பின் மூலம் வேற்றானை உள்ளே அனுமதித்தால் வேறுமதமும் புதிய நம்பிக்கையும் உதயமாய்விடும். அதனால் ஏற்படும் விளைவு ஆரியத்தின் முடிவு என்பதைக் கண்டிப்பாக கவனத்தில் வைத்துக்கொள். மாற்று மன்னர் ஆட்சி உன் வளர்ச்சிக்கும் எதிர்கால எண்ணங்களுக்கும் ஒரு தடை கல்லாகும் என்பதையும் நினைவூட்டுகிறேன். தெற்கே நீ போகவே முடியாது. உன் சூழ்ச்சியில் ஒரு அணு அவர்களுக்குத் தெரிந்தாலும் உனக்குமாத்திரமல்ல, உன் இனத்துக்கு மாத்திரமல்ல, நீ அழைத்துச் செல்ல நினைக்கிறாயே அவர்களும் அங்கே அணுக முடியாது.