பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 சலோம்

சிரியா இளைஞன் :

அஞ்சவில்லை, இளவரசி. உலகத்திலே யாரிடமும் எனக்கு அச்சம் இல்லை. ஆனால், இந்தக் கிணற்றின் வாயைத் திறக்கக் கூடாதென்று மன்னர் ஆணையிட்டிருக்கிறாரே!

சலோம் :

எனக்காக இதைச் செய்யேன், நாராபாத்து நாளை பல்லக்கில் போகும்போது, உனக்காக ஒரு பசிய மெல்லிய மலரை எறிவேன்.

சிரியா இளைஞன் :

இளவரசி, முடியாது, முடியாது.

சலோம் :

(சிரித்துக் கொண்டு) எனக்காக இதைச் செய்யேன், நாரா பாத்து. நாளை பல்லக்கிலே போகும்போது, நுண்துகில் திரை வழியே உன்னைப் பார்ப்பேன். ஒருவேளை, உன்னை நோக்கிப் புன்முறுவல் செய்தாலும் செய்வேன். நாராபாத்து என்னைப்பார் - என்னைப் பாரேன். எனக்காக இதைச் செய்வாயாக!

சிரியா இளைஞன் :

(மூன்றாவது வீரனுக்குச் குறிப்புகாட்டி) முற்றுணர்ந்தோன் வெளியே வரட்டும்..... இளவரசி அவனைப் பார்க்க விரும்புகிறாள்.

சலோம் :

ஆ!

மன்னியின் பணியாள் :

ஆ, வெண்ணிலா வியப்புடன் தோன்றுகிறது. ஒர் இறந்த உடம்பை மூடிக் கொள்ளுவதற்காகக் கையை நீட்டி ஒரு போர்வைத் தேடிக்கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.