பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னிழுக்கின்றனர். அல்லது கீழறுக்கின்றனர் அல்லது காட்டிக்கொடுக்கின்றனர், அல்லது பிடித்துக் கீழே அமுக்குகின்றனர், அல்லது தான்தின்னியாய்த் தான் ஒருவனே, தனக்கு எப்படியோ வாய்த்த 'அரசியல்' 'பொருளியல்' நலன்களைத் துய்க்கின்றனர் என்று சொல்ல முடியுமா? அவர்களின் வேதமதக் (இந்து மதக் கொள்கைக்கு) எவரேனும் ஒரு சிறு முயற்சி செய்கின்றார் என்றால், அவர் நம் சற்சூத்திரர்களில் ஒருவராகத்தான் இருக்கட்டுமே, அவரை என்னமாய்ப் போற்றிப் புகழ்ந்து புரந்து காக்கின்றனர் என்பது தெரியாத ஒன்றா? அதனால்தானே வீடணன் காலத்திலிருந்து, பிரகலாதன் காலத்திலிருந்து. வையாபுரிகளும் மீனாட்சிகளும், மகாலிங்கங்களும், முத்தையாக்களும், சிவஞானங்களும், பக்தவத்சலங்களும், சுப்பிரமணியன்களும், கண்ணதாசன்களும், அடியார்களுமாக எத்தனைப்பேர் அவர்களுக்காகப் பரிந்துபேசி, செய்து உயிர் வாழ்ந்தார்கள் - வாழ்கிறார்கள்!

அறிவைப் பாராட்டுகிற செய்தி நம்மிடம் உண்டா ?

இப்படி அறிவைப் பாராட்டுகிற செய்தி, ஒரு தாராள மனப்பாங்கு, பொதுநோக்கு, நடுநிலைமை நம்மிடம், திருவள்ளுவர் காலத்திலிருந்து என்றேனும் இருந்ததுண்டா? இன்றேனும் இருக்கிறதா? ஒருவன் நம் கொள்கைக்கு என்று வந்து கொடி தூக்கவில்லையானால், நமக்காகத் கத்தவில்லையானால், அவன் எவ்வளவு பெரிய அறிஞனாக, திறமையுள்ளவனாக, பொதுத்தொண்டனாக இருந்தாலும், நாம் அவனைத் திரும்பிப் பார்க்கிறோமா? அவன் அறிவைப் பாராட்டுகிறோமா? எத்தனைத் தன்னலம்! கஞ்சத்தனம்! பொறாமை! புகழ்க்காய்ச்சல்! அப்பப்பா! கொஞ்சமா நஞ்சமா? இப்படியிருந்தால் நாம் பார்ப்பன இனத்தைப்போல் எப்படி அறிவில் முன்னேற முடியும்? எப்படி நம் பெருமையை நம் உலகமெல்லாம் மதிக்கும்படி செய்துகொள்ள முடியும்? பார்ப்பனர் செய்கின்ற அறிவு முயற்சிகளில், அறிவை மதித்துச் செயல்படுகின்ற தன்மைகளில் நூற்றுக்கு ஒரு விழுக்காடேனும் நாம் செய்கின்றோமா?

இவற்றுக்கெல்லாம் நம் சாதி வெறியே காரணம்!

இவ்வாறெல்லாம் நாம் இழிவான நிலைகளில் செயல்படுகிறதற்கு நம்மிடம் உள்ள சாதிகளே, சாதியுணர்ச்சிகளே அடிப்படைக் காரணங்களாக உள்ளன என்னும் உண்மையை நாம் ஆழமாக எண்ணி விளங்கிக்கொள்ள வேண்டும். இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கினால் விளங்கும் என்று தோன்றுவதால், அதையும் சிறிது விரிவாக எழுதிக்காட்ட வேண்டியுள்ளது.

முதலில் ஒருவன், நம்முள் சிறந்த தலைவனாகவோ, அறிவாளியாகவோ இருப்பானேயானால், அவன் என்ன சாதியைச் சேர்ந்தவன் என்று முதலில் நாம் ஆராய முற்படுகிறோம்! அவன் நம்முடைய சாதியானாக இருக்கக் கூடாதா என்று ஆசையேக்கம்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/15&oldid=1164318" இலிருந்து மீள்விக்கப்பட்டது