பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறியாமையைப் பின்பற்றுதலாலும், பிறரை அடக்கியாளல் வேண்டும் என்னும் அக இறுமாப்பாலும் ஆளுமைச் செருக்கினாலும், சாதிகளால் கிடைத்துவரும் சலுகைகளை விட மனமின்மையாலுமே, சாதிகள் இருப்புக்குக் கட்டியங் கூறி, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, எழுதியும் பேசியும் வருகின்றனர் சிலர். சிலரோ, மானமிழப்புக்கும் பொருளிழப்புக்கும் வேற்றுமை உணராது, பொருள் நயப்பால் சாதிச் சகதியுள்ளேயே புதையுண்டு போக விரும்புகின்றனர்.

கோழைகளால் என்றுமே எதுவுமே செய்ய முடியாது!

ஒரு முறை நமக்கு வந்த மடல்களுள் ஒன்று, இத்தகைய கருத்தை வலியுறுத்தி, நாம் பார்ப்பனீயத்திற்காக வழக்காடுவதாகக் குறை சுட்டியிருந்தது. சாதி யொழிப்பிற்கு நாம் கூறும் மாற்றுத் திட்டம் என்னவென்றும் கேட்டிருந்தார், அம்மடலை எழுதியவர். ஆனால் அந்த மடலில் எழுதியவர் பெயரும் முகவரியும் இல்லாமலிருந்தது. அதை எழுதியவரின் கோழைமையையும், ஏழைமையையும் நமக்குப் புலப்படுத்திக் காட்டியது. இத்தகையவர்களால் என்றுமே எதையுமே செய்துவிட முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம்.

சாதியொழிப்பிற்கு ஒரு புதிய திட்டம் !

எனவே, இவைபற்றியெல்லாம் பேசிக்கொண்டிராது, சாதியமைப்பு, அறிவியல் சான்ற குமுகாயப் பொதுநிலை மீமிசை மாந்த முன்னேற்றத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையும் இழிவும் ஆகும் என்னும் கருத்தே மேனிலையாக்கம் கொண்ட கருத்தாதலின், அதன் ஒழிப்புநிலை பற்றி மிகச் சுருக்கமாக, இக் கட்டுரைக்கண் ஒரு திட்டம் அமைத்துத் தருவோம். அரசினர்தாம் இதனைச் செயல்படுத்துவதற்குரியவர் எனினும், பொதுமக்களும் புலமக்களும் அதற்குத் துணையாக நிற்பது மிகமிக இன்றியமையாததாகும்.

முதலில், நெடுநாளைய தீமை ஒன்றை விலக்க
நலன்கள் சிலவற்றையும் இழப்பதில் தவறில்லை!

முதற்கண், ஒரு தீமையை, அதுவும் நீண்ட நெடுங்காலமாக நம் உள்ளத்திலும், உணர்விலும், ஏன், உடலிலும்கூட, பற்றுப்படையாகவும், ஒட்டுண்ணியாகவும், படர்ந்து, நம்மை அதுவும், அதனை நாமும் விடுதலிலா விருப்பத்துடனும் விட்டு விலகா மனத்துடனும் தொடர்பு கொண்டுள்ள சாதிச் சுவையை அல்லது மயக்கத்தை, அல்லது செருக்கை ஒழிக்க வேண்டும் என்றால், சில நலன்களைக்கூட - சலுகைகளையும் சேர்த்தே குறிப்பிடலாம் - நாம் இழந்தே ஆகல் வேண்டும் அடிமைச் சுவை நலன்களைப்போல் சாதிச்சுவை நலனும் மானமிழப்பை உணரச் செய்யாமல் உள்ள-மனம் மரத்துப்போன உணர்வுடையதே! எனவே

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/18&oldid=1164321" இலிருந்து மீள்விக்கப்பட்டது