பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"இல்லென லிரந்தோர்க் கொன் றியாமை யிளிவு - (கலித்தொகை)

"இரப்போன் இன்மை கண்டுங்
கரப்போன் சிறுமை யானுறு கவ்வே" (தகடுர் யாத்திரை)

முதலியவற்றான். நன்கு அறியலாம்.

இனி, ஒருவரிடம் போய் 'ஈ'யென இரத்தலை ஈயேன் என்று கரத்தலையும் விட இழிவு வேறுண்டோவெனின் உண்டு என்க. அஃதென்னையோவெனின் கூறுதும். தன் பசிக்காகவும் தன்னைச்சார்ந்த உறவோர் பசிக்காகவுமே ஒருவன் இரத்தல் கூடும். அவ்வாறு அவன் இரக்காவாறு அவனது மெய் முயற்சியாலும், அறிவுத் திறத்தாலும் வேண்டுவது ஈட்டிக்கொள்ள, வலிய கைகால்களையும், மூளையையும் இயற்கையே எல்லோர்க்கும் கொடுத்திருக்கின்றது. ஆகையினால் இரத்தல் இழிந்தது; பிறர் இடுவதையும் ஏற்றல் தீது என்று யாவரும் மொழிந்தனர்.

வள்ளுவரோ,"ஒருவன் தன் உணவுக்காகவுமன்றித் தன்னைச் சார்ந்தார்க்கு மன்றி, நடுவழியில் நீரின்றி உயிர்துடிக்கும் 'ஆ' ஒன்றிற்கு, அருகில் உள்ள வீட்டின்கண்ணே சென்று 'அம்மையிர்! இங்கு ஓர் ஆ நீர்வேட்கையான் துடிக்கின்றது, அதற்கெனச் சிறிது நீர் ஈக' என்று கேட்பினுங்கூட அது நாவிற்கு வந்த இழிவே” எனும் பொருள்பட,

"ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்" (குறள் 1066)

என்று கூறுகின்றார்.

மேலே இழிவென்று கண்டவை, நாகரிக மேம்பாட்டாலும், பொருள் குறைவாலும், மக்கட் பெருக்காலும் ஒருவருக்கொருவர் வேண்டிய எல்லாத் தேவைகளையும் தாமே செய்துகொள்ள இயலாமையானும், தம்மால் செய்யமுடிந்த பொருள்களைப் பிறர்க்கும் ஈயவேண்டியிருப்பதாலும், பண்டைத் தமிழர் கூறியவாறு இரப்பதை முழுதும் 'இழிவு' என்று இக்காலத்துக் கூறுவாரும், கூறுவார் கூற்றைக் கொள்வாரும் இலர். ஆனால் முற்காலத்தில் இழிவு என்று கருதியவற்றைவிட மிக இழிந்த தொழில்களை இக்கால் மாந்தருள்ளேயே சிலர் செய்கின்றனர். மக்கள் எல்லோரும் ஒரே நிறையும், ஒரே அறிவும், ஒரே உருவும், ஒரே உணர்வும் பெற்றவராயிருப்ப, ஒரு சிலர் உயர்ந்த தொழில்களைச் செய்யவும், ஒருசிலர் இழிந்த தொழில்களைச் செய்யவும், ஏற்பட்டதுகூட நாகரிகமோ, அறிவுடைமையோ, முறையுடைமையோ, அருளுடைமையோ வென்று கேட்கின்றோம்.

வானின் கோள் நிலைகளைக் காணமுயலும் இக்காலத்திற் கூடப் பலவிடங்களில், மானம் என்பதொன்றைவிட்டு வயிற்றுப் பிழைப்புக்காக

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/24&oldid=1164328" இலிருந்து மீள்விக்கப்பட்டது