பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலக்குவியலை அள்ளி எடுப்பாரும், மாந்தரை மாந்தர் வைத்து விலங்குபோல் இழுத்துக்கொண்டு ஓடுவாரும் இருக்கத்தான் வேண்டுமோ? பண்டையில் மக்கட் பெருக்கமின்மையானும், சோம்பலின்மையானும், மக்கள் வெட்ட வெளிகளிலும், ஆற்றுப் படுகைகளிலும், வயற்புறங்களிலும் மலங்கழித்தனர். இற்றையோ புன்மை நாகரிகப் போலிப் பகட்டாலும் பல் துலக்காமல் தேநீர் முதலியவற்றை அருந்தும் படுசோம்பற் கொடு வாழ்வாலும், வேலை விரைவாலும், நகரப் பெருக்காலும், உண்டுறங்கி, உறையும் இடங்களிலேயே கழி நீரகங்களை அமைத்துக்கொண்டு மலங் கழிப்பார் ஆயினர். எனினும் வாழ்க்கை நிலைகட்கும், அறிவியல் விரிவுக்கும் ஏற்ப அக்கழிவுகளை மக்களுள் ஒரு சிலரைக்கொண்டே துப்புரவு செய்வதைவிடப் பொறிகள், அடிநில நீரோட்டம் முதலியவற்றைக் கொண்டு தூய்மை செய்ய முற்படுதல் அறிவுடைமையன்றோ?

இவ்விழிவான தொழில்கள் உள்ளவரை 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் வாய்ப்பிதற்றலுக்கு எட்டுணையும் பொருளில்லை. இதனை இல்லை என்று மறுப்பார் எவரேனும் இத்தகைய இழிதொழிலை ஏற்க முன்வருவரோ? வாரார், வாரார்.

இவை போன்ற இழிதொழில்களை அகற்றுதலும், அவற்றைப் பொறிகளைக் கொண்டு செய்வித்தலுமின்றி வேறு பல்தொழில் சீர்திருத்தங்களிலும், வளம் பெருக்கும் வகைகளில் ஈடுபாடு காட்டுதல் இரங்கத்தக்கது.

அவர் உண்மையிலேயே நாகரிகமுடையவராயின் நம்போல் ஒருவன் இழுப்பவும் அவன் இழுப்ப இவர் இவர்ந்தூர்வதும், தாம் கழிக்கும் மலக்குவியலை, தம்மைப்போன்றவரே அள்ளிப் புறஞ்சேர்த்தலும், சிறுநீர்த் தேக்கங்களை இறைத்துப்போய்ப் புறம் வார்த்தலும் செய்வதை விரும்புவரோ? அத்தகையோர், ஒழுக்கத்து விழுப்பம் பெற்றவரென்றும், மக்களில் நாகரிகம் மிக்கவரென்றும் கூறிக் கொள்ளுதலில் தினைத்துணையும் பொருளில்லை என்று கூற விரும்புகின்றோம்.

தென்மொழி, இயல் : 1. இசை : 9
(1959)

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/25&oldid=1457558" இலிருந்து மீள்விக்கப்பட்டது