பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமய கட்சிப் போராட்டங்களே இற்றைத் தமிழின் இறங்கு நிலைக்கும் தமிழரின் இரங்கு நிலைக்கும் ஆன உண்மைப் பொருட்டாகும். மொழித் தொண்டும் அறிவுத் தொண்டும் குமுகாயத் தொண்டும் செய்யப் புறப்படுவார் எல்லாரும் புறத்தே பேச்சிலும் அகத்தே மூச்சிலும் அவற்றை மறவாமல் வளர்த்து வருகின்ற கொடுநிலை நினைக்குந்தோறும் எந்தமிழ் நெஞ்சம் அனல் மெழுகெனக் கசிந்து கண்ணிர் பொழிகின்றது. எண் பொருள் அளவாச் செலச்சொல்லித் தாம் பிறர் வாய், நுண்பொருள் காண்கின்ற பேரறிவுத் திறம் வாய்ந்தாரும், ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையுட் பேதையரெனவே வருதலைக் கண்டு வருந்தி வருந்தி நெஞ்சு நெக்குருகி உயிர்சாம்பி உடல் குறுகிக் கையற்றுக் குமைந்திருக்கின்றோம். மெய்த்தொண்டு செய்யப் புகுவார் எவரும் பொய்த் தொண்டாலேயே பொருள் தண்டி வருகின்றார். இத்தனை இடர்ப்பாட்டிற்கும் தமிழர்தம் தலை தாழ்ச்சிக்கும் இடனான அம் முப்பற்றுகளையும் வென்று குன்றா உரத்தொடும் குனியா மறத்தொடும் நின்று, எந்தமிழ்த் தாய்க்கும் நாட்டிற்கும் இரவு பகல் பாராது தொண்டாற்ற ஒருவரேனும் முன்வரின், தமிழ் நாடு விரைவில் உய்யுமே என்றும், அவ்வாறு முன்வரும் ஒருவரை இன்னுங் காண்கிலமே என்றும் ஏங்கிக் கிடந்தோம்.

இக்கால் தாங்கள் தொடங்கியுள்ள இந்தியப் பல்தமிழ்க் கழகம் உரஞ்சான்ற கொள்கையுடனும் திறஞ்சான்ற தலைவருடனும் அத்தகைய மெய்த்தொண்டு செய்ய முன்வந்ததே என்றெண்ணி அகமகிழ்ந்து நின்றோம். ஆயினும் ஐய, தங்கள் அழைப்பிதழைக் கண்ணுற்று மிகவும் துணுக்குற்றோம்.

எடுத்த எடுப்பிலேயே, தமிழ்த் தோன்றல் திரு.க.வெ.சித.வே. வேங்கடாசலஞ் செட்டியார் அவர்கள் (அழகப்பா கல்லூரி அறநிலையச் செயலர்) கழகத்தைத் தொடங்கி வைக்கப்போவதாக அழைப்பில் கண்டுள்ளது. பிறர் மாட்டு நின்ற சாதி சமய கட்சிப்பற்றும் கழகத்தின் பெரும்பணியாளர் மாட்டுவரின் அவை தவிர்க்கப் பெறுதல் இல்லையாகின், தங்கள் கொள்கையாகக் குறிப்பிடப் பெற்றிருக்கின்ற அச் செயலாண்மைக்கு எவ்வகை உரந்தந்துள்ளீர்கள் என்பதை எம்மால் அறிய முடியவில்லை. செல்வச் செருக்கும், சாதி சமயச் செருக்குமே தமிழரைத் தாழ்த்தியவை என்பதை எம்மினும் மேலாகத் தாங்கள் அறிவீர்கள். அறிவாலும் கல்வியாலும் செல்வத்தாலும் மேம்பட்டு நிற்கின்ற தங்களைப் போன்ற தலைமையாளரே உள்ளங் கரந்துறைந்து உருவின் தலை காட்டி வெள்ளப் பெருக்காய் விரிந்து பொங்கும் சாதிப் பகட்டுகளைத் தவிர்க்க அஞ்சுவதாயின் எம்மனோரால் செய்தற்கு யாதுளது?

“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்' -குறள்

- தென்மொழி, 1963

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/32&oldid=1164337" இலிருந்து மீள்விக்கப்பட்டது