பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 
'சாதி'க் கிறுக்கர்கள் !
 

நம் நாட்டில் உள்ள தீராத கொடிய தொற்று நோய்கள் சிலவற்றுள் இந்தச் 'சாதி' எந்த மருத்துவத்தாலும் போக்க முடியாத மிகவும் கடுமையான கொடுமையான, தொற்றுநோய். ஆனால் தீர்க்கப்பட வேண்டிய தொற்று நோயாம். நாம் பொதுவாக தொற்று நோய்கள் என்று குறிப்பிடும் நோய்கள், ஏதோ ஆயிரத்தில் ஐந்து பெயர்களுக்குத் தான் பிடித்துக்கொண்டு சீரழிக்கும். ஆனால் இந்தச் சாதியெனும் தொற்று நோயோ இந்தியாவில் உள்ள ஐம்பத்திரண்டு கோடி மக்களையும் பிடித்துக்கொண்டு அவர்களைப் படாதபாடு படுத்திக் கொண்டு வருகிறது. இந்நாட்டை யாண்ட வெள்ளையர்களாலும், பிரஞ்சுக்காரர்களாலும், போர்த்துக்கீசியர்களாலும் அவர்கள் கண்டுபிடித்த மருந்துகளாலும் போக்க முடியாத இந்தத் தொழுநோய், இருக்க இருக்க உள்ளுக்குள்ளேயே புரையோடி அழுகிச் சீழ் பிடித்து நாடெங்கும் நாறத் தொடங்கிவிட்டது. இனி, இந்த நோயை அகற்ற முயல்வது பெரிய மலக்குவியலை மணக்கச் செய்வதுபோல நகைப்பும் வீண் முயற்சியும் வாய்ந்த செயலாகவே முடியும்! எந்த ஒரு காலத்திலாவது இந்திய மண்ணில் இந்தச் சாதி நாற்றம் அறவே நீங்கிவிடும் என்று சொல்வதற்கில்லை! உருசியா, அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகள், தம் தம் கையிருப்பில் வைத்துள்ள அத்தனை அணுகுண்டுகளையும் ஒரேயடியாக இந்திய மண்ணில் போட்டாலும் அவற்றின் மருந்துநெடிக்கு மேல் நம் நாட்டுச் சாதிச் சரக்கின் மூக்கைத் தொளைக்கும் நெடி கலந்த தீநாற்றம் குடலைப் புரட்டிக் கொண்டு தானிருக்கும். அவ்வளவு ஆழமாக, அகலமாக பனிமலையின் உச்சிக்கும் கன்னிமுனையின் அடிக்கும் தலை கால் வைத்துப் படுத்துக் கொண்டு, காலத்தையும் கருத்தையும் வென்று, நாளும் நலம்பல பல்கிப் புதுப் புதுத் தோற்றங்களுடனும் மாற்றங்களுடனும் கதிரவனைப் போல் சுடர்விட்டு ஒளிவீசுகின்ற இந்தப் பொல்லாத சாதியெனும் பெரும்பூதம் என்று இந்திய மண்ணைவிட்டுப் புரண்டு அரபிக் கடலிலோ வங்காளக் கடலிலோ

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/33&oldid=1164338" இலிருந்து மீள்விக்கப்பட்டது