பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளைஞர்களே! உங்கள் அறிவுக்குச் சரியென்றுபடும் எதையும் செய்ய, உங்கள் உரிமைக் காற்றை நீங்கள் உயிர்க்க உங்கள் குடும்பம் தடையிடுமானால், அக் குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள்! உங்கள் ஊர் இடையூறானால், அந்த ஊரை விட்டு, வெளியேறிப் போங்கள்! உங்கள் உற்றார் உறவினர் முட்டுக் கட்டையாக இருப்பவர்களெனில் அவர்களின் உறவுகளை முறித்துப் போடுங்கள்! உங்கள் சாதியோ, மதமோ தடை செய்யுமானால் அவற்றை உடைத்துத் தூள்தூளாக்குங்கள்!

நீங்கள் தம்மந் தமியர் அல்லர்! ஒரு புதிய குமுகாயத்தின் நாடி நரம்புகள்! இனி, மலர்ச்சியுறப் போகும் புதிய உலகத்தின் விரிந்த பார்வையாளர்கள்! உங்களுக்கு அரிதாகக் கிடைத்த இந்த மாந்தப் படைப்பை உங்களுக்கிட்ட தடைகளைக் கொண்டு ஊறுபடுத்திக் கொள்ளாதீர்கள்! முடப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

வானத்துப் பறவைகளைப் பாருங்கள்! காட்டின் விலங்குகளைப் பாருங்கள்! அவ்வுயிர்களினின்று படிநிலை வளர்ச்சி பெற்று வெகு தொலைவுக்கு முன்னேறி வந்து விட்ட நீங்கள், அவற்றை விட மிகக் குறைந்த உரிமையைக் காற்றையே உள் வாங்கி விட்டுக் கொண்டிருக்கீறீர்கள்! அவற்றிற்கு இல்லாத குடும்பக் கட்டுப்பாடுகளோ, சாதி, மத மூட நம்பிக்கைகளோ, கட்டு திட்டங்களோ, நமக்கு எதற்கு?

அவற்றைப் போல் உரிமை வாழ்வை உங்களால் சுவைக்க முடிகிறதா? அவற்றைப் போல் மகிழ்வூடன் உங்களால் வாழ முடிகிறதா? எண்ணிப் பாருங்கள். பின், உங்களை மகிழ்வடையச் செய்யாத, உரிமை வாழ்வு வாழச் செய்யாத, அம் மாந்த முன்னேற்றத் தடைச் சுவர்களைத் தாண்டி உலக நெடும்பாதையில் எம்பிக் குதியுங்கள்! உங்களுக்கென்று மகிழ்வான, உரிமையான எதிர்காலம் ஒன்று காத்துக் கிடக்கின்றது! அதை நோக்கிக் காலடி எடுத்து வையுங்கள்! உங்கள் உரிமையின் குரல் வளையை நீங்களே நெறித்து, உங்களைக் கொன்று கொள்ளதீர்கள்.

தமிழ்ச்சிட்டு குரல்18 இசை:11, 1987

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/64&oldid=1164399" இலிருந்து மீள்விக்கப்பட்டது