பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இக்கட்டுகளையும் இடர்ப்பாடுகளையும் உண்டாக்கி வருவது பெரிய வாய்ப்புக் கேடே!

இவ் விரண்டு எக்குத்தொக்கான சூழலில்தான் இவ்வரசு இம் மண்டல் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. இதைச் செயல்படுத்துகின்ற வலிமையில் சாதிப் பிரிவுகளை ஞாயப்படுத்தவும், என்றென்றும் நிலைப்படுத்தவும் கூடாது; கூடவே கூடாது. அதே பொழுது, குமுகாயத்தில் இன்று மக்கள் சாதித் தன்மையில், கல்வித்தன்மையில், பொருளியல் தன்மையில் ஆகிய மூன்று தன்மைகளிலும் பின்தங்கிய நிலைகளையும் ஒன்றாகவே கருதி மதிப்பிட்டு விடவும் கூடாது. ஒன்றுக்காக மற்ற இரண்டையும் குறைத்து மதிப்பிட்டு விடவும் கூடாது.

மண்டல் குழு தன் ஆய்வுக்கு 1961ஆம் ஆண்டுக் குடிமதிப்புக் கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னாக அக் குழுவின் அறிக்கையை நிறைவேற்றப் புகும் இன்றைய காலகட்டத்தில் நிலைமை வேறாகக் கூட இருக்கலாம். அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு சிற்றுார்களையும் ஒரு நகரப் பிரிவையும் மட்டுமே மண்டல குழு தன் கள ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

அதுவுமன்றி 1953ஆம் ஆண்டு இதே நோக்கத்திற்காக காகா காலேல்கர் தலைமையில் அமைக்கப் பெற்ற ஆய்வுக் குழு, தன் அறிக்கையில் நாட்டில் உள்ள சாதிகளில் 2399 சாதிகளையே குமுக, மற்றும் கல்வி, பொருளியல் நிலைகளில் பிற்பட்ட சாதிகளாகப் பட்டியலிட்டிருக்கையில், மண்டல் தம் அறிக்கையில் 3743 சாதிகளைப் பட்டியலிட்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இதிலிருந்து இன்னும் இவ்வாய்வு தேவைப்படுகிறது என்பதை உணரலாம்.

இவ்வாறு சில தொய்வு நிலைகள் இவ்வறிக்கையில் இருந்தாலும், இன்றைய நிலையில் இது செயற்பாட்டுக்குக் கொணரப்பட்டிருப்பது, பிற்படுத்தப் பெற்ற மக்கள் நிலையில் பெரிதும் பாராட்டுக்குரியது என்றாலும், இந்நிலைகள் இன்னும் திருத்தம் பெற்று முழுமை பெற வேண்டும் என்றே நாம் கருத வேண்டியுள்ளது. அந்நிலையில் நம் தமிழர்கள் எப்படி இருப்பார்களோ, எங்கு இருப்பார்களோ, சொல்ல முடியாது.

இனி, இவ்வறிக்கையைப் பார்ப்பனரில் சிலர் வரவேற்கவும், சிலர் எதிர்க்கவும் செய்கின்ற நிலையும் நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். பார்ப்பனர் எப்பொழுதும் எதிலும் இரண்டு கூறாகவே இயங்குவர். இதனைக் கொண்டு, பார்ப்பனரில் ஒரு வகையினர் தங்கள் நிலையில் மாறி வருகின்றனர் என்றோ, ஒரு வகையினர்தாம் மாறாத தன்மையுடையவர்களாக உள்ளனர் என்றோ, கருதி விட வேண்டா.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/68&oldid=1164493" இலிருந்து மீள்விக்கப்பட்டது