பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திராவிடர்கள், தமிழினத்திலிருந்து ஆரிய மொழிக்கலப்பாலும், இட வேறுபாட்டாலும் மாறுபட்டவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பெற்ற ஒரு குறியீட்டுச் சொல்லேயன்றித் தமிழர்களை அச்சொல் ஒருபோதும் குறியாது. எனவே, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலியவை தமிழ் மொழியினின்று பிரிந்த மொழிகள் ஆகுமேயன்றி, அவை ஒரு போதும் தமிழ் ஆகிவிடா. அது போலவே தமிழும், தமிழரும் ஒரு போதும் திராவிடமும், திராவிடரும் ஆகிவிடமாட்டார். தமிழ் என்பது மூலமொழி; தமிழர் என்பர் மூல இனத்தினர். அது போலவே திராவிடம் என்பது தமிழினின்று பிரிந்த மொழிக் கூட்டத்தையும், திராவிடர் என்பவர் தமிழரினின்று பிரிந்த கலப்பு மொழிக் கூட்டத்தினரையுமே குறிக்கும்.

சமசுக்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை; திராவிடரும் இல்லர். ஆனால், சமசுக்கிருதம் நீங்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனைத்தும் தமிழே! திராவிட மொழியினர் அனைவரும் தமிழரே! தமிழரையும், ஆரியரையும் அல்லாமல் இந்தியாவில் வேறு இனத்தினர் இல்லை. அதுவும் ஆரியரின் இந்திய வருகைக்கு முன் இந்தியாவில் இருந்த ஒரே இனத்தினர் தமிழரே! வடபுலத் தமிழரே ஆரியர் வருகைக்குப் பின்னும், சமசுக்கிருதம் எனும் அவர் மொழி செய்து கொள்ளப்பட்ட பின்னரும் திராவிடர் என்று அழைக்கப் பெற்றனர். இத் தெளிவான வரலாற்று உண்மைகளை உணராதவர்களே தமிழர் திராவிடர் என்றும், திராவிடர் என்னும் மூல இனத்தவரிலிருந்து வந்தவர்களே தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளர், துளுவர் முதலிய இருபத்தொன்பது இனத்தவர் என்றும், தமிழ் மொழியும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையளம், துளுவம் முதலிய அனைத்துத் திராவிட மொழிகளும் திராவிடம் என்னும் தொன்மை மொழியினின்று பிறந்த உடன் பிறப்பு மொழிகளே (Sisters Languages - சகோதர மொழிகளே) என்றும், பலவாறாகத் தத்தமக்குத் தோன்றிய கருத்துகளை வரலாறாக வைத்துத் தருக்கமிடுவர். இவை நிற்க,

இனி, மேற்கூறிய மொழி இன வரலாற்றின் அடிப்படையில், இக்கால் உள்ள தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளர், துளுவர் முதலிய இனங்கள் அனைத்தும், பிந்தைய திராவிட இனத்தவர் என்றும், இவர்களில் சிலர் மிக முந்தைய திராவிட இனத்தவர் (Proto-Dravidians) என்றும், அவர்களே ஆதிதிராவிட இனத்தவர் என்றும், மற்றொரு வரலாற்றுப் பிழையினைச் செய்து வருகிறார்கள். இத் தவறான முந்தைய, பிந்தைய மதிப்பீட்டைத் தமிழின வரலாற்றை நன்கு உணராத மேலை நாட்டையும், வட இந்தியாவையும் சார்ந்த வரலாற்றாசிரியர்கள் சிலர் கூறி வந்தாலும், தமிழர் தவிர பிற தெலுங்கு, கன்னட, மலையாள, துளு இனத்தினர். தங்களுள் ஆதி திராவிடர் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் தமிழருள் உள்ள பழந்தமிழ் இனத்தவரையே ஆதி திராவிடர் என்றும்,

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/71&oldid=1164487" இலிருந்து மீள்விக்கப்பட்டது