பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12

உயிரிழந்து போவதும் உண்டாம் என அறிந்தும், இப்பிரிவு தன் இல்லற வாழ்வை நல்லற வாழ்வாக்கும் எனும் நம்பிக்கையால், அவன் பிரிவை மகிழ்ச்சியோடு வரவேற்று அவனை வழியனுப்பினாள்.

சாதுவன் புறப்பட்டுவிட்டான். கடலோட வல்ல பெரியகலம், புகார்நகர்த் துறையை விட்டு புறப்பட்டு விட்டது. கடல் நீரைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது கலம். கலம் ஊர்ந்து செல்லும் வணிகப் பெருங்குடி மக்கள், செல்லும் நாட்டிற் செய்யவிருக்கும் வாணிக வகைகளையும், அவற்றால் தாம் அடையவிருக்கும் வளப் பெருக்கத்தையும் எண்ணிப் பார்க்கும் இன்ப நினைவில் தம்மை மறந்து மகிழ்ந்து கிடந்தனர். இந்நிலையிற் சில நாட்கள் சென்றன. அவர் இன்ப நினைவில் திடுமென இடிவீழ்ந்து விட்டது.

ஒருநாள் இரவு; கண்ணொளி புகாக் காரிருள் சூழ்ந்த நடுயாமம்; கலம் செலுத்தும் மீகாமன் தவிர ஏனையோர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்; கடலிற் புயல் உருவாகத் தொடங்கிற்று; விரைவில் அது கொடிய புயலாக மாறி வீசத் தொடங்கிவிட்டது. கலம் அப்புய லிடையே அகப் பட்டுக் கொண்டது. எவ்வளவு முயன்றும், நாவாயைக் காப்பது மீகாமனுல் இயலாது போயிற்று. புயல், எதிர்த்து நிற்கமாட்டாது பாய்மரம் முறிந்து வீழ்ந்தது. சுழன்று சுழன்று வீசும் சூறாவளிக்குத் தாங்கமாட்டாது பாய்கள் கிழிந்து பாழாயின. கலம் சுக்கு நூறாய் உடைந்து உருக்குகலந்து போயிற்று. கலத்தில் வந்தோர் கொந்தளிக்கும் கடல் நீரில் வீழ்ந்து கலங்கினர். கடல் நீருள் மூழ்கிக் கணக் கற்றேர் உயிரிழந்தனர். கலத்தின் ஒடிந்த உறுப்புக்களுள் தம் கையிற்பட்ட