பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

வந்தணர்; அதனால் அவர்களுக்கு அறிவுறுத்தி, வேள்வியை நிறுத்தி, வேள்விப் பசுவை விடுவிப்பது இயலாது என்பதை அவன் அறிவான். அதனால் அம்முறையை விரும்பாது ஆவை, அவர் அறியாதவாறு விடுவிக்கத் துணிந்தான். களவு கேடுடைத்து என்பதை அறிந்திருந்தும் ஆவை விடுவிக்கும் அருள் உணர்வு மிக்கமையால், ஆபுத்திரன் களவுநெறியைக் கைக் கொள்ளத் துணிந்தான்.

ஆவேள்வி நடைபெறும் ஆங்குச் சென்ற ஆபுத்திரன், தன் உள்ளக் கருத்தை ஒருவரும் அறியாவாறு அடக்கிக்கொண்டான். இரவுவரும் வரை எவரும் காணுதவாறு எங்கோ ஒளிந்திருந்ததான். இரவின் இடையா மத்தில் எழுந்தான்; ஆவைக் கட்டவிழ்த்துக் கையிற் பற்றிக்கொண்டான். ஊர் எல்லையைக் கடந்தான். காடும் மலையும் செறிந்து கடத்தற் கரியதாய கொடிய வழியே சென்று கொண்டிருந்தான்.

அந்தணர் விழித்துக்கொண்டு நோக்கிய போது வேள்விச் சாலையில் வேள்விப் பசுவைக் கண்டிலர்; உடனே அறிவற்றவரும், கொலைத் தொழிலுக்கு அஞ்சாதவரும் ஆய கொடியோர் துணைகொண்டு, அந்தணர் ஆவைத் தேடிப் புறப்பட்டனர். ஆவின் அடிச்சுவட்டினை அடையாளமாகக் கொண்டு விரைந்து சென்றனர். காட்டு வழியில், கடத்தற்கரிய இடத்தில், ஆவோடு செல்லும் ஆபுத்திரனைக் கண்டு, ஆவோடு அவனையும் கைப்பற்றிக் கொண்டனர். “ஏடா! ஏன் இத்தீங்கு புரிந்தனை; புலையர் புரியும் பொல்லாங்கு புரிந்த நீ அந்தணர் குலத்தவன் ஆகாய். ஆவைக் களவாடல் அந்தணர் அறியாதது. அதைப் புலையரே அறிவர்; அதை நீ புரிந்து விட்டாய்; அடாதது புரிந்த நீ, அந்தணர் குலத்தினின்றும் நீக்கப்