பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32



சிறிது பொழுது ஆங்கு அமைதி நிலவிற்று. அறிவால் அடக்கமாட்டா ஆபுத்திரனைப் பிறப்பின் இழிவு கூறி அடக்க முன்வந்தான் ஒர் அந்தணன். “பெரியோர்களே! இவன் பிறப்பு வரலாற்றை நான் அறிவேன். ஒருநாள் வடமொழி வழங்கும் பார்ப்பனி ஒருத்தியை வழியிடைக்கண்டேன். வழிநடை வருத்தமோடு வாடிய மேனியும் உடையளாய்க் காணப்பட்டாள். குமரி முனையில் நீராடிக் குமரித் தெய்வத்தை வணங்கி வந்து கொண்டிருந்தாள். அவளை எதிர்ப்பட்டு “நின் ஊர் யாது? ஈங்கு வந்த காரணம் யாது”? என வினவினேன். அதற்கு அவள், “நான் வாரணாசி வாழ்வேன்; அந்நகர் அருமறை ஆசிரியரின் மனைவி நான்; குலவொழுக்கத் திற்குக்கேடு செய்து விட்டேன். அப்பழி நீக்கத் தென்னாடு நோக்கி வந்தார் சிலரோடு குமரியாட வந்தேன். வரும் வழியில், கொற்கைமாநகர்க்குத் தெற்கே ஒரு காத வழித் தொலைவில் உள்ள ஆயர்பாடியில் ஓர் ஆண்மகவை ஈன்றேன். ஈன்ற மகவிற்கு இரங்காது ஆங்கே இட்டு, வந்துவிட்டேன்; இதுவே என் வரலாறு” என இயம்பினள். பிறப்பொழுக்கம் கெட்ட அவள் பெற்ற மகனே இவன். நான் கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்ற அச்சத்தால் இதுகாறும் இதைக் கூறிற்றிலேன். நீசன் இவன்! நீவிர் இவனைத் தீண்டன் மின்” எனக் கூறினான். அதுகேட்ட அந்தணர் அனைவரும் ஆபுத்திரன ஒரு சேர இழித்தும் பழித்தும் நகைத்தனர்.

தன்னை நகைத்த அந்தணர் செயல்கண்டு ஆபுத்திரனும் நகைத்தான்; “ஒழுக்கம் கெட்டவள் மகன் எனக் கூறி என்னைப் பழிக்கும் உயர்ந்தோர்களே! உங்கள் நிலை என்ன? நீங்கள் போற்றும் உங்களுக்கு,