பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

அறவுரை பல வழங்கினான். இறுதியில், “அத்திபதி! இந்நாவலந் தீவில் இற்றைக்கு ஏழாம் நாள் நில நடுக்கம் உண்டாகும். அதன் பயனாய் உன் தலைநகராய இடவயம் எனும் இப்பேருரும், நாகநாட்டில் நானூறு யோசனை பரப்புள்ள பெருநிலமும் கடல் நீர் புகுந்து பாழுறும். ஆகவே, இந்நகரை விட்டு இன்றே நீங்கி வேற்றிடம் சென்று வாழ்க” எனக் கூறினான்.

மைத்துனன்பால் தான் கேட்ட செய்தியைத் தன்னுட்டு மக்களுக்குப் பறையறைந்து தெரிவித்தான். அது கேட்டு அந்நகர் வாழ் மக்கள் ஆவும் மாவும் கொண்டு வேற்றிடம் சென்றனர். அத்திபதி, தானையோடு புறப்பட்டு, வடதிசை நோக்கிச் சென்றான். இடை வழியில் காயங்கரை எனும் பேராறு குறுக்கிட்டது. அரசன், அதன், கரைக்கண் அமைந்த பொழிலில் பாடி அமைத்துச் சிலநாள் தங்கினான்.

அரசனைப் பின்பற்றி வந்த அரசிளங் குமரனோடு இலக்குமியும் ஆங்கு வந்திருந்தாள். மன்னனோடு வந்திருந்த மாதவமுனிவனாய பிரமதருமன் அனைவர்க்கும் அறம் உரைத்துக் கொண்டிருந்தான். முனிவனுக்கு உணவளித்துப் பேணும் பொறுப்பினை இலக்குமியும், இராகுலனும் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு நாளும் முனிவன் விரும்பும் உணவை விடியற் காலத்திற்கு முன்பாகவே ஆக்கி அளித்து வந்தனர். ஒருநாள் அடிசிற்றொழிற்குத் துணைபுரியும் பணியாள், யாது