பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

96

உபதேசம் செய்யும் போது, உஷாவின் நினைவு சடக்கென்று தோன்றியது.

எத்தனை விசித்திரங்கள் கண்முன்பு காண நேருகிறது. தன் மனமின்றி, வலுக்கட்டாயமாய் மணந்த வெறுப்புக்காக, இவள் தற்கொலையை நாடுகிறாள்; தன் மனம் நிறைந்து, காதலித்தது கைகூடாததால், அந்தப் பெண்ணின் கதி என்னவாகுமோ, அதுவும் ஒரு வேளை தற்கொலையில் வந்து பாயுமோ! என்று தோன்றும் போது, மிகவும் பயமாகவே ஒரு அதிர்ச்சி உண்டாகியது. அம்மாதிரி தற்கொலைக்குத் துணிந்து ஏதாவது செய்து விடுவாளேயானால், அந்த மகத்தான பாதகம் நம்மையும், நம் குடும்பத்தையுமல்லவா பாதிக்கும்? ஒரே மூர்க்கத் தனமாயிருந்த தம்பியின் நிலைமை எப்படியாகுமோ! என்கிற புதிய, புதிய கவலைகள் வந்து சூழ்ந்து கொண்டு, வாட்டத் தொடங்கியது.

‘இம்மாதிரி கிழட்டுப் பிணங்களுக்கு, கல்யாண ஆசை எதற்கு பகவானே! இம்மாதிரி மனிதர்களைப் பாழாக்கும் நாசமாய்ப் போன ஆசையை ஏன் நீ படைத்து, மக்கள் வாழ்க்கையைச் சிதறவடிக்கிறாய்!’ என்று தனக்குள் மனத்தில் எண்ணியபடியே, கிழவருக்குச் சரியானபடி சிகிச்சை செய்யும் போது, இவனே ப்ரமிக்கும்படி கிழவருக்கு நல்ல குறிகள் காணத் தொடங்கியதைக் கண்டு, சந்தோஷமடைந்தான். இந்த இளம்பெண்ணின் மஞ்சள் குங்குமம் நன்றாயிருக்கும் பொருட்டாவது, இந்த கிழவன் பிழைத்து எழுந்தால் போதும் என்று பலமான யோசனையுடன் மற்றும் சில ஊசிகளைக் குத்தி வயித்தியம் செய்யும் சமயம், அன்று காலையில் ஒரு பெரிய கனவான் கண்ணபிரான் தன் பெண்ணைப் பற்றிப் பேசியவர் இங்கு மெல்ல வந்து, “எப்படி ஸார் இருக்கிறார். தேவலையா.. உயிருக்கு பயமில்லையே” என்று கேட்டுக் கொண்டே வந்தார். இங்கு ஸ்ரீதரன் இருப்பதைக் கண்டு, “பலே டாக்டர்! நீங்கள் வந்தீர்களா! இங்கு வந்து பார்த்து விட்டு உங்களையே