பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு.கோ. 103-வது நாவல்

120

“அம்மணி! கடவுளின் சித்தப்படியே, சகலமும் நடக்கட்டும். நான் அதை ஆனந்தமாகவே ஏற்று நடக்கக் காத்திருக்கிறேன். நீங்கள் என்னிடம் வைத்துள்ள மதிப்பும், விச்வாசமும், கடவுள் மீது ஆணையாக இருப்பது உண்மையாயின், என் தாயாரையும், என் குடும்பத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்வதோடு, தர்ம வைத்யசாலையின் சகல நிர்வாகத்தை, தம்பி தாமோதரனுடன் சேர்ந்து நீங்கள் கவனித்து, வ்ருத்தியடையச் செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய ஜீவியத்தில், நான் கோரிய லக்ஷியம், இதுதான் என் வாழ்க்கையின் இன்பம். இவைகளை நிறைவேற்றி வைத்தால், அதுதான் என்னிடம் நீங்கள் காட்டும் மரியாதையாகும். என் தாயாரை கவனித்துத் தேறுதல் கூறுங்கள்.”

பிறகு தன் தாயைப் பார்த்து, “தம்பியின் புனர் ஜென்மம் எனக்கு பரிபூர்ண சாந்தியைக் கொடுத்து விட்டது. இந்த வழக்கில் யாரும் எத்தகைய முயற்சியும் எடுக்கக் கூடாது. சத்யமே பகவான்! பகவானே சத்யம்! என்பது சாஸ்திரம். அந்த இரண்டு தத்துவங்களும் உண்மையாயிருப்பின், அதற்கு ஜெயத்தை பகவானே கொடுத்து, அதன் மகிமையை உலகறியச் செய்யட்டும். அதற்காக நீங்கள் நிச்சயமாய் பாடுபடக் கூடாது. இதுதான் என் கோரிக்கை. அம்மா… அம்மா ! உன் மனத்தைத் தளர விடாதே… வீட்டிற்குப் போங்கள்… சந்திரா!… இந்திரா… தாமோதரா… போகிறேன்,” என்று கல்லும் கரைந்துருகும்படிக் கூறியவாறு, காரில் அமர்ந்தான்.

காரும், பலருடைய கதறலையும் பீறிக் கொண்டு, கத்தியவாறு பறந்து சென்றது. அந்தோ பரிதாபம்! கல்யாணத்திற்காக பெண் பேச வந்த இடத்தில், இப்படியா விபரீதம் நடக்க வேண்டும்! என்று வானமே கண்ணீர் விட்டு அழுவது போல், சிறு தூரல் தூரவாரம்பித்தது.

“சாந்தியின் சிகரம்”
முதல் பாகம் முற்றிற்று
.