பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ.103-வது நாவல்

122

இச்சமயம், ஒரு வினாடி சிந்தித்துப் பாருங்கள். நிரந்தரமான சிறையில் நமது பவித்திரமான ஆத்மாவைப் போட்டு வருத்துவதை நாம் சற்றும் நினைத்தே பார்ப்பதில்லை. அத்தகைய விஷயம் ஒன்று இருக்கிறது என்பதைக் கூட எண்ணிப் பார்ப்பதில்லை. சிந்திக்க நினைப்பதுமில்லை. மகத்தான குற்றங்களை—பாபங்களை—சிறிது சிறிதாகச் செய்து, அழியாத சிறையில், பயங்கரமான கொடிய நரகத்தில், விழுந்து தவிக்கத் துணியும் நாம், இந்தச் சாதாரண சிறை வாஸத்திற்குப் பயப்படுகிறோம். இதெப்படி இருக்கிறதென்றால், மனிதன் சிறு தூரலுள்ள மழைக்குப் பயந்து, நடுங்கி ஒதுங்கப் பார்க்கிறான். ஆனால் கால வெள்ளத்தின் கர்ஜனை, இவனைக் கூவியழைக்கின்ற பயங்கரத்தை நினைப்பதே இல்லை… மழைத் துளிக்கு பயமா!… காட்டு வெள்ளத்தையும் மிஞ்சிய கால வெள்ளத்திற்குப் பயமா!… இதை நினைத்துப் பாருங்கள். என்னிதயம் ஏழைகளுக்குச் சேவை செய்யவும், அனாதைகளுக்கு உதவி புரியவும், தூய த்யாக வாழ்க்கை வாழ்ந்து, அந்த உத்ஸாகத்துடன், சாந்தியின் சிகரத்தில் நிம்மதியாக வாழவுமே விரும்பியது. அந்த விருப்பத்தை பகவான் தூக்கு மரத்தின் மூலம் அளிக்கத்தான், இந்த விஷப்பரீக்ஷையில் என்னை மாட்டியிருக்கிறார் என்று நான் சந்தோஷமே படுகிறேன். உங்களை நான் மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தயவு செய்து, இனி இப்படிக் கூட்டம் போடாமல் போய் விடுங்கள். போலீஸாருக்கு வீண் தொந்தரவு கொடுக்காமல், கலாட்டா செய்யாமல் போய் விடுங்கள். இதுதான் வேண்டிக் கொள்கிறேன்” என்று வாய் விட்டுப் பெரியதாகக் கூறிய கம்பீரத்தையும், அழகையும் கண்ட பொதுமக்கள் அடைந்த வியப்புக்கும், ஆனந்தத்திற்கும் எல்லையே இல்லாது போய் விட்டது.

“இத்தகைய கருணாமூர்த்தியா கொலை செய்வார்? இத்தகைய வேதாந்தியா கொலை செய்வார்? அநியாயம்! கேவலம் மதம் விட்டு மதம் மாறச் செய்து, ஒரு இந்துப்