பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

சாந்தியின் சிகரம்

தாமோதரன் சென்று பார்த்ததே கிடையாது. இந்த இரண்டு தாபனங்களையும் வைத்து, இவற்றின் பேரால் பணம் சம்பாதிப்பதாயும், பணக்காரர்களிடம் அனாகரீகமாய் பணம் அதிகம் பறிப்பதாயும், பரமயோக்யன், ப்ரம்மசாரி என்று வேஷம் போடும் அண்ணா தீய நடத்தை நடத்த, இந்த ஸ்தாபனங்களை உதவியளிக்கும் கொடிய இடங்களாக அமைத்துக் கொண்டிருக்கிறான் என்றும், அபாண்டமாய் எண்ணி, ஏளனம் செய்து வந்த தாமோதரன் ஆடம்பரமற்ற சர்வ சாதாரண உடையில், மிகவும் அமரிக்கையாயும், சோகமே வடிவாயும் முதலில் அனாதை நிலயத்திற்குச் சென்று பார்த்தான்.

“என்ன பரிதாபம்! எத்தனை குழந்தைகள்! எத்தனை பெண்மணிகள்!… நாதியற்றுக் கிடக்கும் பரிபவத்துடன், இங்குக் காட்சியளிக்கின்றார்கள். நம் நாட்டில் இத்தனை கோராமைகளா இருக்கின்றன? அடாடா… இதுகாறும், இத்தகைய பரிதாபம் நம் கண்ணில் படவே இல்லையே; உம்! என் கண்கள் அஞ்ஞான அந்தகாரத்தில் மூடிக் கிடந்த சமயத்தில், மற்ற எதுதான் என் கண்களில் படும்? நான் அத்தகைய உணர்ச்சியுடன் பார்த்திருந்தால், அண்ணாவைப் போல், அவ்வளவு சிறந்த ஸேவையைச் செய்து, த்யாகத்துட னிருக்காவிடினும், ஏதோ பச்சாத்தாபமாவது உண்டாகி இருக்குமல்லவா! இத்தனை குழந்தைகளும் அனாதைகளா? பெற்றோரை இன்னாரென்று அறியாத பரதேசிகளா?”… என்ற ஒரு விதமான உணர்ச்சி இதயத்தில் வேகமாய் உண்டாகியது.

ஒரு நாளும் இல்லாமல் திருநாளைப் போல், இன்று தாமோதரன் வந்திருப்பதையும், அவனுடைய மன மாறுதலையும், ஆடம்பரமற்ற எளிய உடையையும் ,சாத்வீகமான பார்வையையும் கண்டு, அங்குள்ள மானேஜர் முதல் சகலரும் வியப்புற்றது ஒரு புறம்; தங்கள் எஜமானருக்கு இத்தகைய விபரீத சம்பவம் நேர்ந்து விட்ட துக்கம் ஒருபுறம்; இரண்டும் பாதிக்க தாமோதரனை வரவேற்றதுடன், “எஜமான-