பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


20

மிகச் சிறந்த கீர்த்தி வாய்ந்த பெரிய டாக்டரை, இம்மாதிரி கைது செய்திருப்பது சற்றும் பொருந்தாது. இது அநியாயம்; அக்ரமம்; அவருடைய குணமும், நடத்தையும் நன்றாக அறிந்தவர்களுக்கு, அநியாயத்தைப் பொறுக்க முடியாது. சர்க்காரும், போலீஸாரும் இந்த விஷயத்தை நன்றாக யோசித்துப் பார்த்துப் பின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பல பத்ரிகைகள் தலையங்கம் எழுதின. பல ப்ரமுகர்கள், சர்க்காருக்கே மனு செய்து கொண்டார்கள். டாக்டரின் அபிமானிகள் பலர், கூட்டங்கூட்டமாகச் சென்று, பெரிய அதிகாரிகளை நேரில் வேறு பார்த்து, விண்ணப்பம் செய்து கொண்டார்கள். பல சங்கங்கள், க்ளப்புகள், ஸொஸைடிகள், மருத்துவச் சம்மந்தப்பட்ட சகல நிலையங்கள் முதல் சர்க்காருக்கு மகத்தான மனுவைச் செய்து, பெருங்கிளர்ச்சி பண்ணத் தொடங்கினார்கள்.

சிறைச்சாலையில், தனி லாக்கப்பிலுள்ள ஸ்ரீதரனுக்கு உண்மையில் கடுகளவும் விசனம் என்பதே இல்லாமல், மனச்சாந்தியே உண்டாகியது. அவமானமே தோன்றவில்லை. பல பல பக்தர்களின் சரிதைகளை எல்லாம் அவன் மனத் திரையில் படம் போல் கண்டு களித்தான். பக்த ராமதாஸர் என்ன! தொண்டரடிப்பொடிகள் என்ன! இவர்கள் இப்படியே அபாண்டப் பழிக்காகச் சிறையில் அடைபடவில்லையா? அத்தகைய மகான்களுக்கே இக்கதியாயிற்று என்றால், நான் எந்த மட்டும்… கேவலம், ஒரு பூச்சிக்குச்ச சமமானவனல்லவா? “நிம்மதியாக நாம ஸங்கீர்த்தன பஜனை செய்து கொண்டு, ஆனந்தமாய்க் காலத்தைக் கடத்தலாம். இதுதான் உண்மையான சாந்தியை அடையும் மார்க்கமென்று பகவான் காட்டியிருக்கிறார் போலும்!” என்று தனக்குள் தீர்மானமாய் எண்ணி, ஆனந்தமாய், பஜனை செய்து கொண்டிருப்பதைக் கண்ட ஜெயிலதிகாரி முதல் சகலரும் வியப்புக் கடலாடினார்கள் என்றால் மிகையாகாது.