பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

சாந்தியின் சிகரம்

“தம்பி, அம்மா உள்பட என்னை யாரும் பார்க்க வர வேண்டாம்; எனக்கு அது பிடிக்கவில்லை; அவர்களோ, இந்த சம்பவத்தைப் பெரும் விபரீதமாக எண்ணிக் கதறுவார்கள். அவர்களுக்குத்தான் துன்பமேயன்றி, எனக்கொன்றுமில்லை. ஒருவரையும் நான் பார்க்க விரும்பவில்லை என்று சொல்லி விடுங்கள்…” என்று கட்டளையிட்டு விட்டான். வெளி விஷயம் இவனுக்கு எதுவுமே தெரியாமலிருக்கவே வேண்டினான்.

சட்டப்படி வழக்கு, மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணையாகி, செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விட்டது. ஸ்ரீதரன் பணக்காரப் பொதுமக்களிடம் அதிகம் பணம் வாங்கி அதைக் கொண்டு, தர்ம வைத்யசாலையும், அனாதை நிலயமும் நிர்வாகம் செய்வது உலக ப்ரஸித்தம். துரைக் கண்ணன் தனக்கு வ்யாதி குணமாக்கியதற்காக இரண்டாயிரம் ரூபாய் இனாம் வேறு கொடுத்திருக்கிறார். பெண்ணையுங் கொடுத்து, லக்ஷக்கணக்கிலுள்ள சொத்தையுங் கொடுத்து விடுவதாகச் சொல்லிய துரைக்கண்ணனிடம் டாக்டர் அதிக அன்பு வைத்து எதிர்பார்த்தார். பெண் சீமையிலிருந்து வேறு கணவனுடன் வந்து இறங்கி விட்டதால், அந்த ஆத்திரத்தில் தகப்பனையும், மகளையும் கொன்று விட்டு, அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு போகத் தம்பியையும் உடந்தையாக அழைத்து வந்தான். பழியை வெள்ளைக்காரர் மீது போட்டு விடவே எண்ணினான். ஆனால், அந்த ஜோடனைகள் இவன் மீதே பாய்ந்து விட்டன… என்று சாட்சிகள் மூலம் நிரூபணமாகி விட்டதால், ஸ்ரீதரனே குற்றவாளி என்று கூறி வெள்ளையர்களை விடுதலை செய்து, வழக்கை மேல் கோர்ட்டுக்கு மாற்றி விட்டார்கள். சந்தர்ப்ப சாட்சியங்களே, டாக்டருக்கு விபரீதமாகி விட்டன.

இதைக் கீழ்க் கோர்ட்டுக்கே போகாமல், எப்படியாவது தடை செய்து விட வேண்டும் என்று உஷா முதலியவர்கள் செய்த ப்ரயத்தனம் வீணாகி விட்டது கண்டு, எல்லோரும்