பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

162

சொல்கிற அன்று கூட துக்கம் தாங்காமல், வீட்டிலேயே புலம்பிக் கொண்டு கிடந்து விட்டாள். மகனைப் பார்த்து, எத்தனையோ யுகங்களாகி விட்டது போல், வேதனையும், சங்கடமும் உண்டாகி வதைக்கிறது. பார்க்கவும் ஆசை அடித்துக் கொள்கிறது. மகத்தான பதவியில் புகழ்மாலை சூடிப் பார்க்க வேண்டிய மகனைச் சிறைச்சாலைக் கம்பிகளுக்குள் கொலைகாரக் கைதியாய்ப் பார்ப்பதற்கு மனது சகிக்காமல் துடிப்பதால், போக வேண்டாம் என்றும் தோன்றுகிறது.

இந்தக் குழப்பத்தில் தவிக்கும் தாயாரை, தாமோதரன் தேற்றி, சமாதானம் செய்து ஒருவாறு அமர்த்தினான். மறு நாள், அதிகாலையில், எல்லோரும் கிளம்பிக் காரிலேயே போவது என்கிற தீர்மானம் முடிவாயிற்று. உஷாவும் விடைபெற்றுக் கொண்டு சென்றாள். இதே மனிதன்… இதே உஷா…இதே கண்கள்… இதே மனதுதான்…

ஆனால் அன்று இருந்த விசித்திரப் போக்கென்ன! இன்று பரிசுத்தமாய் ஸ்புடம் வைத்தது போன்று, அப்பழுக்கற்ற தூய சிந்தனையின் பரிமளமென்ன! பாசி பிடித்த இடத்தைச் சுண்ணாம்பு போட்டுத் தேய்த்துச் சுத்தம் செய்தால், எப்படி துலாம்பரமாய் இருக்குமோ, அது போல் தனது இதயம் பரிசுத்தமாய், தன்னாலேயே உணர முடியாத புதிய தேஜஸுடன் ப்ரகாசிப்பது போன்ற உணர்ச்சி உண்டாகியது. அதைக் கண்டு, தனக்குள் தானே வியுந்து கொண்டான். பிறந்த நாள் முதல் இத்தகைய பரிசுத்தத்திலேயே லயித்து, ஆனந்தமாய் பக்தியும், கருணையும் இதய தடாகத்தில் தேக்கிக் கொண்டு, பரம த்ருப்தியுடன் தொண்டு செய்து வந்த மகா மேதையும், உத்தமனுமாகிய அண்ணனின் அன்பையறியாது ஆதியில் மோசம் போனோமே! என்ற துயரமே உண்டாகி வருத்தியது.