பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


23

சிறைச் சாலையையே தவச்சாலையாக எண்ணிப் பூரிக்கும் மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட கிடைக்க மாட்டார்கள். அத்தகையவர்களைப் பார்க்கும் எத்தகையோருக்கும் அளப்பரிய ஆச்சரியமும், கரை காணாத வியப்பும் உண்டாகித் திகைப்பது சகஜந்தானே. டாக்டர் ஸ்ரீதரன், கைதி என்கிற பெயருடன் சிறையிலிருக்கிறானேயன்றி, அவனுடைய முகத்தில் காணும் சந்தோஷமும், சாந்தியும் மற்றப்படி வெற்று மனிதர்களிடம் காண்பதே அரிதாகி விடுகிறது. என்ன அதிசய உள்ளம் படைத்த மனி தன் என்று ஜெயிலில் உள்ள கைதிகள் உள்பட வேலைக்காரர்களும், சகலமான உத்யோகஸ்தர்களும் மூக்கின் மீது விரலைத்தான் வைத்தார்கள்.

ஸ்ரீதரனைப் பற்றிய சகல விதமான புகழையும், அவனுடைய சகாக்களும், இன்னும் இதரர்களும் சரமாரியாய் பத்திரிகைகளிலும், கடித மூலமாயும் எழுதித் தெரியப் படுத்தியிருப்பதால், ஜெயிலில் உள்ள எல்லா உத்யோகஸ்தர்களுக்குமே ,அவனிடம் அனுதாபமும், ஒரு வித மதிப்புந்தான் உண்டாகியது.

ஏற்கெனவே, தண்டனை அனுபவிக்கும் கைதிகள் மட்டும் இவனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையால், தங்கள் தங்கள் வேலைகளைச் செய்யும் போது, எப்படியோ தெரியாமல் வந்து, கண்காட்சியில் பொருளையோ, ம்ருகத்தையோ பார்ப்பது போல், பார்த்து விட்டு சிலர் பேசாமல் போய் விட்டார்கள். சிலரோ… அடேயப்பா! இத்தினி பெரிய டாக்டராயிருந்து கொலெ கூடவா பண்ணிப்புட்டான்!… ஏய், அப்பேன்! .நாங்கல்லாந்தான் படிக்காத முட்டாளுங்க. பொயக்கத் தெரியாத கட்டெங்களா, காலத்தெ ஒயிச்சிப் புட்டோம். அதினாலே, திருடியும்… கொலெ செஞ்சும், இப்படி அவதிபட்றோம். நீ கூடவா, படிச்சவன், இந்த மாதிரி வந்துட்டெ… என்று துடுக்காகக் கேட்டு வைப்பார்கள்.