பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாந்தியின் சிகரம்

165

பிண்டங்களின் மீது பாய வேண்டாம். என்னைச் சொல்லியதற்கு, நானல்லவா கோபிக்க வேண்டும். எனக்கு அவர்கள் சொல்லியதிலிருந்து, ஒரு அதிசயமான உலகானுபவமும், பாடமும் கற்பித்தது போன்ற சந்தோஷமே உண்டாகியது. அதனால், நான் பரம் சந்தோஷத்தை அடைகிறேன். நீங்கள் தயவு செய்து, அவர்களை ஒரு வித தண்டனைக்கும் உள்ளாக்காதபடி. காப்பாற்ற வேண்டும். இதை மேல் அதிகாரிகளுக்குச் சொல்லாமல், எனக்காக மன்னித்து, இதோடு விட்டு விட வேணும்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

இத்தகைய அபூர்வமான மனிதனை இது வரையில் பார்த்திராததால், வார்டருக்கும், அந்த கைதிகளுக்கும் ஆச்சரியமாகி விட்டது. அவர்களில் சிலர், தாங்கள் இளப்பமாகப் பேசி விட்டதை எண்ணி வருந்தினார்கள். வார்டர் மட்டும் ஒரு விழி விழித்துப் பார்த்து விட்டு, அவனுக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தை இழக்க மனமின்றிச் சென்றான். சின்ன வேலையாயிருப்பினும், பெரிய வேலையாயிருப்பினும், அவரவர்களின் அதிகாரத்தையும், கீழே உள்ளவர்களை மிரட்டும் அட்டகாஸத்தையும், ஒருவருமே விடுவதில்லை. இதுதான் உலகத்து மக்களின் பிறவிக் குணம் போலிருக்கிறது இத்தகைய மனோபாவம் நிறைந்திருக்கும் இடத்தில்—இதயத்தில்—அன்பு என்பது எங்கிருந்து உண்டாகும்? எஜமானன் என்ற பட்டம் வந்து விட்டாலே, தன்னை நம்பியுள்ள வேலைக்காரர்களை, அடிமை போல் நடத்துவதுதான் அவர்களுடைய கடமை என்று நினைத்து விடுகிறார்கள்.

கணவன் என்கிற பதவி வந்தவுடனே, மனைவியை அடிமைப்படுத்தி நடத்தவே தாம் பிறந்திருப்பதாகச் சில மூடர்கள்… ஏன்? …பல மூடர்கள்… நினைத்து நடத்துவதால், எத்தனை பெண்கள் இதே ஏக்கத்தில் நோயாளியாகி விடுவதை, என் அனுபவத்திலேயே பார்த்து வருகிறேன்! இதே போல், தான் மாமியாராக ஆய் விட்டால், கேட்கவே