பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

சாந்தியின் சிகரம்

பேஷண்டு ஒரு அனாதைப் பெண்ணிருக்கிறாள். அவளுக்கு சதா சர்வகாலமும், டாக்டரின் நினைவாகவே தவிக்கிறாள். அவளையும் கூட அழைத்துச் சென்றால், மிகவும் சந்தோஷப்படுவாள். பாவம், டாக்டருக்கும் சந்தோஷமாகவே இருக்கும். அம்மாவிடம் இதைத் தெரிவித்து, உத்திரவு வாங்குங்கள். நான் அந்தப் பரதேசியைக் கூட அழைத்து வருகிறேன். சரி… மறுபடியும் போன் செய்கிறீர்களா! நல்லது…” என்று டாக்டர் துளஸிபாய் வெகு உத்ஸாகத்துடன், உஷாவிடம் டெலிபோனில் பேசி விட்டு, உடனே தர்ம ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்தாள்.

இவளைக் கண்ட உடனே, நோயாளிகளில் சிலர், “டாக்டர்! … கேஸ் விஷயம் ஏதாவது தெரிந்ததா! நம் பெரிய டாக்டர் எப்போது வருவார்கள். அவரைப் பார்த்து, எங்கள் ஆவலைக் கூறி மகிழ வேண்டுமே” என்று ஒரே முகமாய்க் கேட்டார்கள்.

படுக்கையோடு படுக்கையாய் ஒட்டிக் கொண்டு, மிகவும் பலவீனமான நிலைமையில் உள்ள ராதா என்கிற அனாதைப் பெண், துளஸியைப் பார்த்ததுமே, தாங்க மாட்டாத பதைப்புடன், “டாக்டர்!… டாக்டர்! இப்படி வாருங்கள். ஏதாவது தகவல் கிடைத்ததா? உங்கள் முகத்தைப் பார்த்தால், ஏதோ விசேஷ சமாசாரம் கொண்டு வந்திருப்பது போல், பரபரப்பும் பூரிப்பும் தெரிகிறதே. டாக்டர் வீட்டிற்குப் போயிருந்தீர்களா?” என்று அன்பே வடிவாய்க் கேட்டாள்.

துளஸி மிக்க ஆர்வத்துடன்… “ராதா! உனக்கு சந்தோஷ சமாசாரத்தைத் தெரிவிப்பதற்காகவே நான் ஓடோடி வந்தேன். டாக்டர் ஏதோ பெரிய மனது செய்து, ,அவர்களுடைய தாயார், தம்பி, முதலானவர்-