பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

2

ஒரு வாழ்வா? உப்புச்சப்பற்ற வெறும் வரட்டு வாழ்க்கையல்லவா! மகா தபஸ்விகளை எல்லாம் ஆட்டி வைக்கும் கல்யாண ஆசை உன்னை மட்டும் விலக்கிவிட்டதா?…” என்று பேசும் போது, அவள் குரலில் துக்கத்தின் கரகரப்பும், கம்மலும் காணப்பட்டன.

ஸ்ரீதா:— அம்மா! இந்த அல்ப விஷயத்திற்காகவாம்மா கண்ணீர் விடுகிறாய். உன்னைப் பாட்டியாக்கவும், குடும்பத்தைக் கிளை கிளையாகப் பெருக்கவும், தம்பி தாமோதரன் இருக்கையில், ஏனம்மா கவலைப்படுகிறாய்? பெற்ற தாயின் மனத்தை மக்கள் மகிழ்விப்பது போல், பெற்ற மக்களின் உள்ளத்தையும் தாயார் களிக்கச் செய்ய வேண்டாமா?… அம்மா!… இந்த அல்பமான மணவாழ்க்கையில், நான் விரும்பும் லக்ஷ்யத்தை அடைந்து, சாந்தியின் சிகரத்தை எட்ட முடியாது என்பதுதான் என் துணிபு. என்னுடைய லக்ஷ்யம் சேவை, த்யாகம், தயை, பரோபகாரம் முதலிய படிகளில் ஏறி, சாந்தியின் சிகரத்தை அடைந்து, பேராநந்தத்தை அனுபவிப்பதேயாகும்— என்று வீராவேசத்துடன் சொல்லும் போது, டெலிபோன் மணி கணகணவென்று அடித்தது. ஸ்ரீதரன் ஒரே தாவாகத் தாவிச் சென்றான். பெற்ற மனம் பித்தல்லவா! அந்த இதயத்தின் தாங்க முடியாத தாகத்தையும், பேராவலையும் பிறந்த மனம் அப்படியே அறிய முடியுமா! தவிக்கும் உள்ளத்துடன் பின்னாலேயே ஓடினாள். ஆனால், இடைமறித்துப் பேச தைரியமின்றி மவுனமாக நின்றாள்.

ஸ்ரீதர:— ஹல்லோ… யாரு!… தீன தயாளு வீட்டிலா… சரிதான்; இதோ வருகிறேன்… என்ன! 105 டிகிரியா… பரவாயில்லை பயப்பட வேண்டாம். இன்று மாலைக்குள் இறங்கி விடும். சரிதான்—என்று கூறி ரிஸீவரை வைத்த போது… தம்பீ! இதோ பாரு! நான் யாரைப் பற்றிப் பேச வந்தேனோ, அவர்கள் வீட்டினரே இப்போது உன்னிடம் பேசியதைக் கேட்டு சந்தோஷப்படுகிறேன். தீன தயாளுவின் வீட்டிலிருந்து அவருடைய சகோதரி நேற்றுதான்