பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை மு. கோ. 103-வது நாவல்

56

முதலில் தம்பியின் பிசாசு பயத்தையொழித்து, உடனே கல்யாண உத்ஸாகத்தை மூட்டி, அவனைச் சமாதானம் செய்து, வாழ்க்கையில் இனிப்பை உண்டாக்குவது என் கடமை… அம்மா… என்ன ஏதோ பலமான யோசனை செய்கிறாய்? என் வார்த்தையை நம்பு; இனி அனாவச்யமாய் தம்பியின் விஷயத்தில் தலையிடாதே; எல்லாவற்றையும் கடவுள் நன்றாக த்ருப்தியாக நடத்துவான்; அவன் திருவடியில், பாரத்தைப் போட்டு விடம்மா! சுமக்கிறவன் அவனிருக்கையில், நாமேன் கவலைப்பட வேணும்.

கமல:- தம்பீ ! உன்னைச் சன்யாசியாகக் காண்பதா என் பெருமை?

ஸ்ரீத:- அம்மா! திரும்பத் திரும்ப இதையே சொல்லாதேம்மா!… சன்யாசியானால் என்ன கெட்டு விடுகிறது. நான் இப்படியிருப்பதால்தான், உனக்கும் தெரியாமல், நம்முடைய இன்னொரு குடும்பத்தை நான் காப்பாற்றுகிறேன். தெரியுமா…

கம: (திடுக்கிட்டு)… என்ன! இன்னொரு குடும்பமா! அதென்ன தம்பீ?

ஸ்ரீத:- அதுவா! அதுதான் முதல் சாபக்கேட்டின் அலங்கோலம்; நம்ம அப்பாவின் லீலையின் விளைவால், பாவம், ஒரு பாலிய விதவை… உலகமறியாத பச்சைப் பயிர் போன்ற பெண், பலியாகித் தெருவிலும் நிற்கச் செய்து விட்டாராம். அந்தப் பெண்ணை ஏமாற்றிப் பசப்பிய வார்த்தைகளின் பயனாய், தன்னிலையழிந்து வீட்டையும் விட்டு வெளியேறி, தன் சுற்றத்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் விரோதியாகி, ஜாதி ப்ரஷ்டமே ஆய் விட்டாளாம். அப்பாவையே நம்பி, வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்ட பாவிப் பெண்ணுக்கு, ஒரு பெண்ணும் பிறந்ததாம். அதற்கு நாலைந்து வயதாவதற்குள்ளேயே, அப்பாவின் அத்யாயந்தான் கொலைக் குற்றத்தின் மரண தண்டனையில் பாய்ந்து, ஆயுள் தண்டனையில் முடிந்து விட்டது..,