பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

4

இஷ்டப்படிக்கு நான் விவாகம் செய்து கொண்டு, தனியாய், சுகமாய் வாழ்க்கை நடத்துவேனேயன்றி, உன்னை எதிர் பார்க்க மாட்டேன். பிறகு, என் மீது குறை கூறிப் பயனில்லை” என்று வெடுக்கென்று மிகவும் பதட்டத்துடன் கூறினான்.

இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கும் கமலவேணியம்மாளின் இதய தாபம், ஆத்திரமும், துடிதுடிப்பும் கொண்டுள்ள மகனுக்கு என்ன தெரியும்? இரண்டு கண்ணும் எத்தனை முக்யமோ, அத்தனை முக்யமான உணர்ச்சியுடன் இரண்டு மகனுடைய க்ஷேமத்தையும், கோரித் தவம் கிடக்கும் கமலவேணியின் கண்களில் நீர் நிறம்பி வழிந்தது. அதைத் துடைத்துக் கொண்டு, “தம்பீ! தாமோதரா! பதறி விடாதேப்பா! பதட்டத்தினால், நன்மை ஒன்றும் உண்டாகாது. உங்களிருவருக்கும் கல்யாணத்தைச் செய்து கண்ணாரக் கண்டு களிக்க, என் தாயுள்ளம் எத்தனை ஆவலுடன் துடிதுடிக்கின்றது தெரியுமா? ஏற்கெனவே உன் பிதாவின் கரும்புள்ளிச் செயல் ஒன்று நம் குடும்பத்தின் கண்ணியத்தைச் சிதைத்து, அழியா வடுவை உண்டாக்கி விட்டதை, நாம் எத்தனை ஜென்மமெடுத்தாலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது!...அந்த ஒரு அதிர்ச்சியினால் அளிந்த புண்ணாகி விட்ட என் உள்ளம் சாந்தி… சாந்தி… என்று தேடியலைந்து திரிகிறது. அந்தத் துடிப்பான மனத்திற்கு, உங்களிருவராலாவது ஒரு கடுகளவு சாந்தியும், அமைதியும் உண்டாகுமா? என்று இராப்பகல் நான் துள்ளித் துடித்துத்தான் வருகிறேன். ஏற்கெனவே, உள்ள களங்கத்தை மறைத்து, மறந்து நாம் தலை நிமிரும் சமயம் இந்தச் சிறிய விஷயங்களில், அண்ணனுக்கு விரோதமாய் நடப்பது தர்மமா! நமக்கு ஏராளமான பணமிருப்பதனால், ஏதோ ஒரு வகையாய் இருக்கிறோம். அப்படிப் பணமிருந்தும், உன் சகோதரிகள் மூலம் படும் இம்ஸை சொல்லி முடியாது. இதெல்லாம் தெரிந்தும், நீ அவசரப்படலாமா? என் வார்த்தையைக் கேள்!…பெற்ற தாயாகிய நான், என்றும் உனக்கு ஹிதமே செய்வேனேயன்றி வேறு விதம் செய்யமாட்டேன்…