பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சான்றோர் தமிழ்

ஆராய்ச்சிகள்’(Some Studies about the Cheras of yore) என்னும் தலைப்பிட்டு ஆங்கில நூல் ஒன்றும் எழுதி நாவலர் பாரதியார் வெளியிட்டார்.

சேரர் தாய முறை

சேரர் தலைநகரான வஞ்சி குறித்துத் தமிழறிஞர் பெரு மக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவன போன்றே, சேரர் தாய முறை குறித்தும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.

இன்றைய கேரள மாநிலமாம் அந்நாளைய சேர நாட்டில் ஆண் மக்கள் தம் தந்தையர்க்குப் புதல்வராக அமைந்தாலும், அவருக்கன்றி, அத் தந்தையாரின் உடன் பிறந்தாள் புதல்வர்க்கே அச்சொத்து உரிமையுடையதாகும் இதுவே ‘மருமக்கள் தாய முறை’ என இப்பொழுது வழங்கப்படுகிறது. இவ்வழக்கு இடைக்காலத்தது என்பர். ஆனால் நாவலர் பாரதியார் அவர்கள் இதனை நன்காராய்ந்து சேர நாட்டில் முற்காலத்தில் வழக்கிலிருந்தது மருமக்கள் தாய முறையே என்றும், பழந்தமிழக முழுவதும் அக்காலத்தே இததாய முறையே வழிவழி மரபிலிருந்தது என்றும் ஆராய்ந்து கண்டு ‘சேரர் தாய முறை’ என்னும் நூலை எழுதினார்.

‘system of Succession in the Chera Kingdom’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் நூலை யாத்தார்.

மாரி வாயில்

நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்க் கவிப் புலமைக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவது ‘மாரி வாயில்’ என்னும் கவிதை நூலாகும். வடமொழியில் காளிதாசர் இயற்றிய ‘மேக சந்தேசம்’ என்னும் நூலைப் போன்றது இந்நூல். பஞ்சபாண்டவருள் நடுப் பிறந்த பார்த்தனான