பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை

147

பேர்கள் சிதைந்தும், திரிந்தும், மருவியும், மாறியும் தத்தம் முதல் நிலையை இழந்துள்ளன. அவை மீண்டும் பழைய நிலை எய்திப் பண்புறுதற்கு இந்நூல் பெருந்துணை செய்தல் ஒருதலை. இந்நூலுள் பொலிதரும் சில ஊர்ப் பேர்களின் வரவாறு, சாம்பியும் சோம்பியும், நலிந்தும் மெலிந்தும் கிடக்கும் நம் மக்கட்கு அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம் புரியும் பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் சவலையை நீக்கி, அதன் மாட்டு வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாகும்.”

1947இல் வெளிவந்த ‘தமிழர் வீரம்’ என்னும் பெயரிய நூல் தமிழர்தம் போர்த் திறத்தையும், படைத் திறத்தையும் விளக்குகிறது.

அடுத்த 1948இல் வெளியிடப் பெற்ற ‘தமிழின்பம்’ பாரதப் பேரரசின் சார்பில் இயங்கும் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது. இந்நூலுக்கென வழங்கப்பட்ட ஐயாயிரம் வெண்பொற் காசுகளுடன் பத்தாயிரம் வெண்பொற் காசுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழக நிதி வளர்ச்சிக்காக இவர் கொடுத்தார். இதனால் பலரும் இவரைப் பாராட்டினர்.

ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப்பின் வந்த ‘வழி வழி வள்ளுவர்’ வள்ளுவரைப் பிற புலவர்கள் எடுத்தாளும் திறனை விளக்கி நிற்கிறது.

இறுதியாக 1958இல் வெளிவந்த ‘தமிழகம் அலையும் கலையும்’ தமிழ்நாட்டின் கலைச்சிறப்பையும். கலை வளர்த்த நகரங்களின் நல்லியல்புகளையும் ஆய்கின்றது.

ஆய்வு நூல்களாக அன்றிக் கட்டுரைத் தொகுப்புக்களாக வந்தவை ‘கடற்கரையிலே’, ‘ஆற்றங்கரையினிலே,’ வேலும்