பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

சான்றோர் தமிழ்

எண்ணிறந்தவர். கண்ணுக்கினிய பூஞ்சோலையின் இடையே, ஒரு மாவின் கீழ்க் கோயில் கொண்ட மங்கை பங்கனை “ஏகம்பத்துறை எந்தாய் போற்றி” என்று அருந்தமிழ் மலரால் அருச்சனை செய்தார் மாணிக்கவாசகர்.”

—ஆற்றங்கரையினிலே. ப. 9.

7. பழந்தமிழ் இலக்கிய நூலின் கருப்பொருளை நுட்பமாக ஆய்ந்து அதன் சொற்பொருள் நயங்களை எளியோரும் எளிதில் உணரும்வண்ணம் திட்பமாகக் கூறும் பாங்கினை இவர் நடையில் காணலாம்.

8. முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றும் திறத்தினையும் இவர் நடையில் காணமுடிகிறது.

9. ஏற்ற இடங்களில் சிறந்த இலக்கியப் பகுதிகளை அளவறிந்து மேற்கோளாகக் காட்டும் நோக்கினையும் உடையதாக அமைகிறது.

10. அழகு தமிழினை மட்டுமின்றிப் பழகு தமிழின் இனிமையையும் காணலாம். இலக்கியச் சுவையும், ஆராய்ச்சிக் குறிப்புகளும், அனுபவ உண்மைகளும் ஆங்காங்கே இணைந்து படிப்போர் நெஞ்சத்தில் தமிழின் இனிமையைப் பதிக்கும் உயர் நடை இவர் நடை.

11. இவர்தம் உரைநடைத் தமிழுக்கு ஒளியும் உயிரும் ஊட்டும் உயர் பண்புகள் எளிமையும் இனிமையும் தெளிவும் திண்மையும் ஆகும்.

12. தமிழ் மொழியின் சொல் வளத்தினை—அதன் பெருமையை அருமையை அறிவிக்கும் உயர்ந்த நடை இவர் நடை.