பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

சான்றோர் தமிழ்

யாரின் அறிவுத்திறமும் அன்னையாரின் உறுதி நெஞ்சமும் டாக்டர் அவர்கள் பெற்ற குடும்பச் சொத்து ஆகும். டாக்டர் அவர்கள் படிக்கும் நாளில் கணக்குப் பாடம் சிறப்பாக வந்தது. அப்பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து முதன்மையாகத் தேர்வு பெறுவார்கள். திருப்பத்துர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் 1928ஆம் ஆண்டு பெரும் பள்ளி இறுதித் தேர்வு (s.s.l.c) எழுதி வெற்றி பெற்றார்கள்.

முதற் பணி

அக்காலத்தில் இந்த நாள் போன்று ஆங்காங்கே கல்லூரிகள் அமைந்திருக்கவில்லை. கல்லூரிக் கல்வி யென்றால் சென்னைக்கே வந்து படித்தல் வேண்டும். வீட்டிற்கு ஒருமகன் என்ற நிலையில் டாக்டர் அவர்கள் தொடர்ந்து கல்லூரிக்கல்வி கற்க இயலவில்லை. குடும்பச் சூழல் காரணமாக வரி வருவாய்த்துறையில் (Revenue Department) எழுத்தராகச் (Clerk) சேர்ந்தார்கள். ஏறத்தாழ அப்பணியினைத் திறம்பட மூன்று ஆண்டுகள் ஆற்றினார்கள். உயர் அலுவலர்களின் ஒருமித்த பாராட்டுக்கு உரியவரானார்கள். மனச்சான்றை மதித்துக் கடமை உணர்வோடு பணியாற்றிய காரணத்தால் வேலைப் பளு இவர்களுக்கு மிகுதியாகத் தரப்பட்டது. இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வேலைப்பளுவும் அதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறையும் இவரை அந்தப் பணிக்கு ஒரு முழுக்குப் போடச் செய்தன. 1931ஆம் ஆண்டு முதல் 1934 வரை மூன்றாண்டுகள் ஊருக்கு வந்து ஓய்வு பெற்று உடல் நலத்தினைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.