பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சான்றோர் தமிழ்


பதிப்பின் திறம்

ஏட்டிலிருந்த பாடத்தை இவர் அப்படியே பதிப்பிக்கவில்லை. ‘ஏடு எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. ஆதலால் ஒரு முறைக்குப் பலமுறை நன்கு ஆராய்ந்து செல்லரித்துப் போன இடத்தையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, தக்க பாடங்களை ஊகித்துத் தம்பாலுள்ள பயிற்சியாலும், இயற்கையான அறிவுத் திறமையாலும் பழஞ்சுவடிகளை ஆராய்ந்து செப்பம் செய்தார். திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து தாமே வழி அமைத்துக் கொண்டு புஞ்சைக் காட்டை நஞ்சைக் காடாக்கிய நல்ல அறிவு உழவர் இவர். இவருடைய பதிப்பின் திறம் இன்று பேராசிரியப் பெருமக்களால் ஒருமுகமாகப் பாராட்டப் பெறுகின்றது. இவர், தாம் பதிப்பித்த ஒவ்வொரு நூலுக்கும் எழுதியுள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும் நூலைப் பற்றிய குறிப்புகளும், பிற செய்திகளும், அறிவு உலகத்தால் என்றென்றும் பாராட்டப்படும் தகுதி வாய்ந்தன. இவர் எடுத்துக் கொண்ட உயர்வு மிக்க சிறப்பு, ஊக்கம் நிறைந்த உயர் உழைப்பாகும். எனவே மறைந்த இராஜாஜி அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது;

‘சாமிநாத ஐயர் முயற்சியுடன் எறும்பும் தேனீயும் போட்டி போடலாம்’ என்றும், ‘தமிழ்மொழியின் லாவகமும்’ எளிய நடையில் ஆழ்ந்த பொருள்களை அளிக்கும் அதன் ஆற்றலும் இவரால் நமக்குத் தெரிய வந்தன.’

என்றும், ‘தமிழ் வியாசர்’ என்றும் இவரைப் போற்றியுள்ளார். இவருடைய பதிப்பு நூல்களில் ஒவ்வொரு பக்கங்களின் அடியிலும் அடிக்குறிப்பில் பலவகையான நூல்களிலிருந்து எடுத்துக்காட்டப் பெற்ற ஒப்புமைப் பகுதிகளும் சொல்லாற்றல் வளமும் காணப்பெறும். நூலின் இறுதியில் நூல்